வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தது போல் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு போலீசார் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து போராட்டம், ஆர்பாட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு என தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த வேல்முருகன் மீது டோல்கேட்டை தாக்கியதாக வழக்கு தொடர்ந்து போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீனிவில் வேல்முருகன் வெளியான நிலையில், திண்டுக்கல்லில் டாஸ்மாக் சரக்குடன் சென்ற லாரி தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்று தற்போது வேல்முருகன் சற்று அடக்கி வாசித்து வருகிறார்

.

இதே போல் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் செல்லும் இடங்களில் எல்லாம் செய்தியாளர்களை சந்திக்கும் போது தமிழக அரசை கடுமையாக விமர்சிக்கிறார். மேலும் சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராகவும் சரத்குமார் பேசி வருகிறார். அத்துடன் அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனை சரத்குமார் சந்தித்து பேசினார். அப்போது போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை போலீசார் குறி வைத்து கைது செய்வதற்கு எதிராக சில கருத்துகளை சரத்குமார் தெரிவித்தார்.

இதனால் சரத்குமார் மீது தற்போது போலீசாரின் பார்வை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடிகர் சங்கத்திற்கு என்று வாங்கிய இடத்தை விதிகளை மீறி விற்பனை செய்து மோசடி செய்ததாக அண்மையில் தான் அம்மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் சரத்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதிலும் போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட சில கடுமையான பிரிவுகளில் சரத்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை தூசி தட்டி சரத்குமாரை முதலில் விசாரணைக்கு அழைக்க காஞ்சிபுரம் போலீசாருக்க உத்தரவு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு சென்று வந்த பிறகும் சரத்குமார் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நில மோசடி வழக்கில் சரத்குமாரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.