வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40  மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக  தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. 

இதில் திமுகவுக்கு 20 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே போல் இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுளளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

அதே நேரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அக்கட்சியுடன் எஸ்டிபிஐ கட்சி மட்டும் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது.

தேர்தல்  கூட்டணி தொடர்பாக தொடக்கம் முதல் கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திய போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  வேல் முருகன், அமமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார், ஆனால் அது ஒத்துவராததால் சிறிது நாள் ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்த வேல் முருகன், வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு  ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

பாஜக மற்றும் பாமகவுக்கு எதிராக திமுக கூட்டணிக்கு அவர் ஆரதவு அளிப்பதாக வேல் முருகள் தெரிவித்தார். 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்துக்கு குறிப்பாக பாமக பெல்ட்டில்  வேல்முருகனை திமுக பயன்படுத்திக்  கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.