பெண்ணாகரம் இடைத் தேர்தலுக்குப் பிறகு பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வேல் முருகள் பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேல் முருகன் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று ஸ்டாலினை சந்தித்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து வேல் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாமக ராமதாஸ், மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவர் மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

பாமக தொடங்கப்பட்ட சமயத்தில் வன்னிய மக்களுக்காக உண்மையிலேயே ராமதாஸ் பணியாற்றினார். என்று மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்காக அமைச்சர் பதவியைப் பெற்றாரோ அன்றே அவர் மாறிப் போனார் என வேல் முருகன் தெரிவித்தார்.

அன்புமணி சுகாதாரதுறை அமைச்சராக இருந்தபோது, ஒவ்வொரு மாதமும் மருத்துவத் துறையில் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. அந்த 20 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தில் 20 சதவீதம் அன்புமணிக்கு கமிஷனாக கிடைத்து வந்ததாக வேல் முருகன் தெரிவித்தார்.

இப்படி பணம் புரளத் தொடங்கியவுடன்தான் ராமதாஸ் வன்னியர்களை மறந்து போனார் என்று குறிப்பிட்டார். வன்னிய மக்களுக்காக போராடிய தியாகிகள் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தரலாம் என தான் கூறியபோது, நான் பணத்துக்கு உங்கே போவேன் என்று கூறி ராமதாஸ் மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் பல கல்லூரிகளைத் தொடங்கி அதற்கு உரிமையாளரான ராமதாஸ், ஒரு கல்லூரிக்குக் கூட வன்னிய தியாகிகளின் பெயரை சூட்டாமல் தனது மனைவியின் பெயரையே வைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்தார்.

8 வழிச்சாலை தொடர்பாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அன்புமணி இந்த சாலை அமைக்கவிட மாட்டேன் என பொது மக்களை கட்டிப் பிடித்து உறுதி அளித்தார். ஆனால் இன்று என்ன ஆனது ? 8 வழிச்சாலையை கொண்டு வர வேண்டும் என்று துடியாய் துடிக்கும் பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார் என வேல் முருகன் குற்றம் சாட்டினார்.