Asianet News TamilAsianet News Tamil

அவசியம் இல்லாமல் வாகனத்தணிக்கை கூடாது.. கொரோனா எதிரொலியாக , காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் அட்வைஸ்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் களப்பணியாற்றும் சென்னை காவல்துறையினர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு புதிய வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Vehicle inspection should not be done unnecessarily .. Echo of Corona, Chennai Police Commissioner's advice to the police.
Author
Chennai, First Published Apr 28, 2021, 4:46 PM IST

கொரோனா பெருந்தொற்று காலத்தில் களப்பணியாற்றும் சென்னை காவல்துறையினர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு புதிய வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் காவல்துறையினர் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளாகி வரும் நிலையில் தற்போது வரை 324 காவல்துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தற்போது வரை 14 பேர் கொரோனாவால் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மக்களோடு மக்களாக நின்று முன்களப் பணியாளர்களாக செயல்படும் காவல்துறையினரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு சென்னை காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக களப்பணியாற்றும் காவல்துறையினர் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும், இதனை கட்டாயம் அனைவரும் பின்பற்ற சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இணை நோய் உள்ள காவல்துறையினருக்கு பொதுமக்களுடன் அதிக தொடர்பு இல்லாத வகையில் எளிமையான பணியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Vehicle inspection should not be done unnecessarily .. Echo of Corona, Chennai Police Commissioner's advice to the police.

மேலும், காவல்துறையினர் அனைவரும் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கிருமி நாசினி கொண்டு தொடர்ந்து சுத்தப்படுத்துதல் போன்ற நிலையான வழிகாட்டு நடைமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, குற்றவாளிகளை கைது செய்யும் கட்டாயம் ஏற்படும்போது மட்டுமே கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அப்படி கைது செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட காவல்துறையினர் மட்டும் உரிய பாதுகாப்புடன் குற்றவாளியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விபத்து, இறப்பு, தற்கொலை போன்ற வழக்குகளில் மருத்துவமனைகளுக்கு காவல்துறையினர் செல்ல நேரும் பட்சத்தில் அவர்கள் முறையாக பி.பி.இ கிட் அணிந்து சென்று வர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் காவல் ஆய்வாளர் அனைவரும் அவர்களின் குழுவினர் இந்த வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்து உறுதி செய்யவேண்டும் எனவும், பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் தொடர்பான விசாரணைகள் உள்ளிட்டவை திறந்த வெளியில் நடத்த வேண்டிய நடவடிக்கைகளை அனைத்து காவல் நிலையங்களும் மேற்கொள்ள வேண்டும் எனவும் சென்னை காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுடனான நெருக்கத்தை குறைக்கும் பொருட்டு தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே வாகனத் தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அப்படி வாகன தணிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் முகக் கவசம், ஷீல்ட் மற்றும் கையுறை ஆகியவற்றை அணிந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Vehicle inspection should not be done unnecessarily .. Echo of Corona, Chennai Police Commissioner's advice to the police.

மேலும், உயர் அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் காவலர்கள் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு முறையாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் உணவுகளை உட்கொள்கிறார்களா என்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் அனைத்து காவல்துறையினரும் மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்துவர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளாகும் பட்சத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி பாதிக்கப்பட்ட காவலரோ அவரது குடும்பத்தினரோ கொரோனா கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவிக்கு 044-23452437 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நிலமையை பதிவு செய்து வேண்டிய உதவிகளை கேட்டுப் பெறலாம் எனவும், அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பாதிக்கப்பட்ட காவலரை பரிசோதனை செய்து, அண்ணா பல்கலைகழகத்தில் காவல்துறையினருக்கு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள கோவிட் கேர் செண்டருக்கு அவரை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பாதிக்கப்பட்ட காவலருடன் தொலைபேசி மூலம் தினசரி தொடர்புகொண்டு அவருடனும் அவரின் குடும்பத்தாருடனும் உடல்நலன் குறித்து கேட்டறிந்து வேண்டிய உதவிகளை உடனுக்குடன் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உயர் மருத்துவ சிகிச்சைகள் பாதிக்கப்பட்ட காவலருக்கு தேவைப்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட துணை ஆணையர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் தொடர்பில் இருந்து காவலரின் மருத்துவமனை அனுமதி மற்றும் படுக்கை வசதி உள்ளிட்டவற்றை உறுதி செய்துதர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Vehicle inspection should not be done unnecessarily .. Echo of Corona, Chennai Police Commissioner's advice to the police.

மேலும், பாதிக்கப்பட்ட காவலருக்கு பிராண வாயு தேவைப்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட இணை ஆணையர்கள் மற்றும் கூடுதல் ஆணையர்கள் கண்காணிப்பில் வேண்டிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு இணை ஆணையாளர் அண்ணா பல்கலையில் பிரத்தியேகமாக காவல்துறையினருக்கென உருவாக்கப்பட்டுள்ள கோவிட் கேர் செண்டரின் பராமரிப்பை தொடர்ந்து தனது கண்காணிப்பில் வைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்தையும் காவல்துறையினர் அனைவரும் தொடர்ந்து பின்பற்றி கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து தங்களையும் குடும்பத்தாரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios