கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. காங்கிரஸ் சார்பாக கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை மேற்பார்வையிட புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வீரப்பமொய்லி, சிதம்பரம், ஜெயராம் ரமேஷ், தாம்ரத்வஜ் சாஹு ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் காங்கிரஸ் மூத்த தலைவர் குறித்து வீரப்பமொய்லி குற்றம்சாட்டி இருக்கிறார்.

இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் பேசிய அவர் கொரோனா வைரஸை தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் தேசிய ஊரடங்கு குறித்து மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் மாபெரும் தவறு செய்ததாக குற்றம் சாட்டி இருக்கிறார். ஊரடங்கு அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி நாட்டில் பெரும் குழப்பம் நீடிப்பதாகவும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக மாநில அரசுகள் தயாராக கால அவகாசம் அளித்து இருக்க வேண்டும் என்றும் கூறினார். 

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கொரோனா பரிசோதனைக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று கூறிய வீரப்பமொய்லி அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் அதுவரையில் எந்த அளவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து கணக்கிட முடியாது என்றார்.