தமிழ்நாட்டுக்கு கருநாடக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆளுநரா?
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கும் மாநிலத்திலிருந்து ஆளுநரா?
முன்பு ஜெயலலிதா எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்ட திட்டம் மீண்டும் இப்போது தூசி தட்டி - திணிப்பதா?

தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஒப்புக்கொள்ளக்கூடாது, கூடாது - கூடவே கூடாது!தமிழ்நாட்டில் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் முடிந்து திரும்பிச் சென்றுவிட்டார்; அதனால் தமிழ்நாட்டின் ஆளுநர் (கவர்னர்) பதவி காலியாக உள்ளது.
தமிழ்நாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ்.காரர் ஆளுநரா?

அந்த இடத்திற்கு, கருநாடக அரசில் முன்பு அமைச்சராகப் பதவி வகித்த, ஆர்.எஸ்.எஸ். கட்சியின் மூத்த உறுப்பினராகப் பணியாற்றிய டி.எச்.சங்கரமூர்த்தி என்பவரை தமிழ்நாட்டுக்கு ஆளுநராக நியமிக்க மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி. அரசு தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது - ஆறு மாதங்களுக்கு முன்பு முயன்றதை அறிந்து, காவிரி நதிநீர்ப் பிரச்சினை தீராத நிலையில், விவகாரத்திற்குரிய அம்மாநிலத்தவர் ஒருவர் தமிழ்நாட்டு ஆளுநராக நியமனம் ஆவதை கடுமையாக எதிர்த்தார்.

பி.ஜே.பி. ஆட்டுவிக்கும் பொம்மையா அ.தி.மு.க. அரசு?
அதன் காரணமாக அப்போது அத்திட்டத்தைப் பின்வாங்கிய மோடி அரசு, மத்திய அரசு - இப்போது மீண்டும் இன்று அதே நபரை தமிழ்நாட்டு

ஆளுநராகத் திணிப்பது எந்த தைரியத்தில்?

இன்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் உள்ள அ.தி.மு.க. அரசு மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டிடும் அரசு என்ற எழுதப்படாத ஒப்பந்தமா? நாம் அப்படி அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிட மாட்டோம்.
என்றாலும் நிலைமைகள் அப்படித்தான் யோசிக்க வைக்கின்றன.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க மத்தியில் உள்ள மோடி அரசு இந்த நியமனத்தின்மூலம் முயலுகிறது.
1. காவிரிப் பிரச்சினையைக் கிடப்பில் போடுவது; கருநாடகத்திற்கு! (அங்கே சட்டமன்றத் தேர்தல் வெற்றியைக் குறி வைத்து) இங்கு தங்கள் ஆசாமியை ஆளுநராகப் போடுவதா?


தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை வளர்க்கவும் திட்டம்!
2. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை வளர்க்க இந்த நியமனம் ஒரு தூண்டுகோலாக ஏதுவாக, அமையும்; அரசியல் மாற்றங்களை உருவாக்கவும், தங்கள் இஷ்டப்படி தமிழக அரசை ஆட்டி வைக்கவும் இந்த ஏற்பாடு பயன்படக்கூடும் என்பதே அவர்களது உள்நோக்கம். (இவரை நியமிக்க ஆர்.எஸ்.எஸ். ஆணையிட்டுள்ளதாம்!)
எதிர்ப்பைத் தெரிவிக்கட்டும் தமிழக அரசு!
இதற்கு தமிழ்நாடு அரசு தனது பலத்த எதிர்ப்பை உடனடியாகக் காட்டவேண்டும்!
தமிழ்நாட்டு அத்துணைக் கட்சிகளும், அமைப்புகளும், விவசாய அமைப்புகளும் இந்த நியமனத்திற்கு வன்மையான எதிர்ப்பைத் தெரிவித்து இதை முறியடிக்க உடனே தாமதியாமல் முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.