இன்று பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொள்ளும் நிலையில்,  ‘தோல்வியுற்றவர்களை அமைச்சர் பொறுப்புகளில் அமர்த்துவது என்பது கழிவுப் பொருள்களை மீண்டும் இலையில் பரிமாறுவதற்கு ஒப்பாகும் என்று திராவிடர்கழகத் தலைவர் கி வீரமணி கொச்சை கொச்சி வார்த்தைகளில் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  அமைச்சரவையில் யாரை சேர்ப்பது, எத்தனை எண்ணிக்கை, யாருக்கு, எந்த இலாகா என்பதெல்லாம் பொதுவாக நாடாளுமன்ற ஆளுங்கட்சித் தலைவரின் (பிரதமரின்) ஏகபோக உரிமை. ஆனால், பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அது தனிச் சுதந்தரத்துடன் இயங்கும் ஓர் அரசியல் கட்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் அரசியல் வடிவமேயாகும்.

அதற்கு ஆணைகளும், தாக்கீதுகளும், அதனை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்திலிருந்தே வரும் - இலாகா ஒதுக்கீடு உள்பட. இம்முறை தனித்தே பெரும் வெற்றியை பா.ஜ.க. (303) பெற்றிருந்தாலும்கூட, ஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஆணையை ஏற்றுத்தான் நடக்கவேண்டிய கட்டாயம் உண்டு”,

“ஜனநாயகத்தின் மற்றொரு அம்சம் முன்வாசலில் படுதோல்வி அடைந்தவர்களை, கொல்லைப்புற - பின்வாசல் மூலம் அமைச்சராக்குவது, ஆட்சியில் அமர்த்துவது ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜனநாயக வெற்றி பெற்றவராவார். அதில் தோல்வி அடைந்தவர்களை மீண்டும் மாநிலங்களவைமூலம் கொல்லைப்புற வழியில் கொண்டு வந்து அமைச்சர் பொறுப்புகளில் அமர்த்துவது என்பது கழிவுப் பொருள்களை மீண்டும் இலையில் பரிமாறுவதற்கு ஒப்பாகும் என்பதை ஆளும் தலைவர்கள் - ஜனநாயகத்தில் நன்னம்பிக்கை உடையோர் மறந்திடக் கூடாது!

அவ்வளவு அறிவுப் பஞ்சமா அவர்களது அணியில்? தோற்றவர்களை மாநிலங்களவை வேட்பாளர் ஆக்குவதென்றால், ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் கூட ஓர் ஆரோக்கியமான அரசியல் மரபை உருவாக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் கி.வீரமணி. அட்வைஸ் என்ற பெயரில் வீரமணியின் இந்த கொச்சை கொச்சை வார்த்தை போட்டு வெளியாகியுள்ள அறிக்கை பிஜேபியினரை கொதிக்க வைத்துள்ளது.