veera sivaji BJP national secretary H. Raja of Tamil Nadu

தமிழகத்தின் வீரசிவாஜி பாஜக தேசிய செயலாளர் H.ராஜா என தியான பீடம் ஆசிரமத்தின் சாமியார் நித்யானந்தா புகழாரம் சூட்டியுள்ளார். 

ஹெச்.ராஜா தொடர்ந்து தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். 

இதனால் அவருக்கு பலர் கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் தான் மனதில் பட்டதை செய்தியாளர்களிடம் பேசியபோதோ, அல்லது தமது டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமோ கொட்டி விடுவார். 

தமிழகத்தில் மதத்தை தூக்கி பிடித்து கொண்டு ஆடுபவர்களில் முதல் ஆள் யார் என்று சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லி விடும் அது ஹெச்.ராஜா தான் என்று. 

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசும் அத்தனை மேடைகளிலும் பேட்டிகளிலும் மற்ற மதத்தினரை புண்படுத்தாமலும் தன்னுடைய மதத்தை தூக்கி பிடிக்காமலும் பேசாமல் இருந்ததே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

சில நாட்களுக்கு முன்பு கூட கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து சர்ச்சை பேச்சை பேசியதாக கூறி பொதுமேடை என்று கூட பார்க்காமல் ஹெச்.ராஜா வைரமுத்துவை தரக்குறைவாக பேசினார். 

அது பலராலும் விமர்சிக்கப்பட்டது. மேலும் கண்டனங்களும் எழுந்தன. பேட்டி கொடுக்கும்போது கூட செய்தியாளர்கள் ஏதேனும் கேள்வி எழுப்பி அதற்கு பதிலளிக்க முடியவில்லை என்றால் உடனே அவரை பார்த்து ’you are a anti indian' என்று கூறிவிட்டு தப்பித்து ஓடிவிடுவார். 

ஆனாலும் செய்தியாளர்கள் மடக்கி மடக்கி கேள்வி எழுப்புவார்கள். இதனிடையே சில நாட்களுக்கு முன்பு ஹெச்.ராஜா தொலைக்காட்சி உரிமையாளர்கள் பற்றி பேசிய சர்ச்சை வீடியோ வலைதளங்களில் உலாவந்தது. 

அதில் செய்தியாளர் ஏதோ கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் அத்தனை பேரும் அழுகியே சாவார்கள் எனவும் நான் சொல்வது சரிதானே எனவும் கேள்வி எழுப்புகிறார். இந்த வீடியோ மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என கருத்து தெரிவித்து விட்டு பல எதிர்ப்புகளுக்கு பிறகு அதை நான் பதிவிடவே இல்லை என ஒற்றை காலில் நின்று சாதித்து காட்டினார். 

இந்நிலையில் தியான பீடம் ஆசிரமத்தின் சாமியார் நித்யானந்தா ஹெச்.ராஜாவுக்கு பட்டம் ஒன்றை வழங்கி கவுரவித்துள்ளார். 

அதாவது தமிழகத்தின் வீரசிவாஜி பாஜக தேசிய செயலாளர் H.ராஜா என தியான பீடம் ஆசிரமத்தின் சாமியார் நித்யானந்தா புகழாரம் சூட்டியுள்ளார்.