திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திருவள்ளூருக்குப் பதிலாக காஞ்சிபுரம் தொகுதியை திமுக தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம், நீலகிரி, தென்காசி, நாகப்பட்டினம் ஆகியவை தனித் தொகுதிகளாக உள்ளன. வட மாவட்டங்களில் பரவலாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சியின்  தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இன்னொரு தொகுதியாக திருவள்ளூர் தொகுதியை திமுக ஒதுக்கீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பி திமுகவிடம் அளித்தப் பட்டியலில் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகள் உள்ளன.
இன்னொரு தொகுதியில் விசிகவின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிட உள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெற்ற நிலையில், விழுப்புரத்தில் அக்கட்சி வேட்பாளர் சுமார் 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கடந்தத் தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், திருவள்ளூரில் ரவிக்குமாரும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்கள்.
இந்த முறை ரவிக்குமாருக்கு விழுப்புரம் தொகுதியைக் குறி வைத்து விசிக கேட்டது. ஆனால், விழுப்புரம் வன்னியர்கள் செல்வாக்கு உள்ள தொகுதி என்பதால் இங்கே நேரடியாக திமுக வேட்பாளரை நிறுத்துவதே சரியாக இருக்கும் என்று விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொன்முடி, மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டதால், விழுப்புரம் தொகுதியில் திமுக களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம். 
விழுப்புரம் தொகுதி கிடைக்காவிட்டால் காஞ்சிபுரம் தொகுதியைத் தர வேண்டும் என திமுகவிடம் விசிக சார்பில் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், காஞ்சிபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கேட்டுள்ளது. இந்த விஷயத்தில் திமுக என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால், தற்போதைய நிலையில் திருவள்ளூர் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக இரண்டு தொகுதிகளில்  மட்டுமே வெற்றி பெற்றதால், அங்கே போட்டியிட விசிக தயக்கம் காட்டும் என்றே தெரிகிறது.