பத்திரிகையாளர்கள் குறித்து மிகக் கேவலமாகப் பேசிய டாக்டர் ராமதாஸ் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்கும் வரை ராமதாசின் செய்திகளை புறக்கணிக்கும் துணிச்சல் இருக்கிறதா?குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்கும் வரையாவது தயாரா?’ என்கிறார் வன்னி அரசு.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில்,...நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் அவர்கள் கடந்த செப்டம்பர்16,2018 அன்று வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்.அப்போது அவர் பேசும் போது, “ எங்க பசங்கள போலீசு தேவையில்லாம கை வைக்குது. இனி அப்படி கை வச்சா நானே வெட்டுவேன்” என்று பேசினார். அன்றைக்கு பெரும் சர்ச்சையாக மாறியது. ஆளும் தரப்பு எம்எல்ஏவாக இருந்தாலும் மறுநாள் அதிகாலையே கருணாஸ் கைது செய்யப்பட்டார்.சிறையிலும் அடைக்கப்பட்டார்.அதாவது, போலீஸ் அதிகாரியை வெட்டுவேன் என்று சொன்னவுடனே, கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்து சிறைப்படுத்தியது.பொது வெளியில் இப்படி வன்முறையை தூண்டும் வகையில் பேசியது தவறு என்று அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக கண்டித்தார். சனநாயக சக்திகள் எல்லோருமே கருணாசின் இந்த வன்முறை பேச்சை கண்டித்தனர்.

ஆனால்,அதை விட மோசமாக தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக பாமகவின் நிறுவனர்மருத்துவர் ராமதாஸ் அண்மைக்காலமாக பேசிவருகிறார்.கடந்த 22.6.2019 அன்று சென்னை முத்தமிழ்ப்பேரவை அரங்கத்தில் நடைப்பெற்ற கருத்தரங்கத்தில் பேசும் போது ஊடகவியலாளர்களை, “ டே நாய்களா கம்னாட்டி பசங்களா கேள்வி கேட்டா வெட்டுவேன்” என்று பேசினார். 
அந்த பேச்சு ஏதோ ‘பெருசு’தோல்வியின் விரக்தியில் உணர்ச்சி வசப்பட்டு பேசியிருப்பார் என்று சில ஊடகவியலாளர்கள் தங்களை தாங்களாகவே சமானமானப்படுத்திக்கொண்டார்கள்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக அதன் தலைவர்  பாரதி தமிழன் கண்டித்து அறிக்கை கொடுத்திருந்தார். அதன் பிறகாவது தான் பேசிய கருத்துக்கு மருத்துவர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்திருக்கலாம். ஆனால் தனது பேச்சு சரியானது தான். என்னுடைய பேச்சை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று நேற்று ( 23.6.2109) நடைப்பெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் அழுத்தம் திருத்தமாக பேசினார்.

மருத்துவர் ராமதாசின் சமீபகால பேச்சு என்பது மிக மோசமாக, நாலாந்தர பேச்சாளர்களை போல மாறிவருவதை கவனிக்கலாம். தேர்தல் பரப்புரையின் போது, “பூத்களை கைப்பற்ற வேண்டும்.
திமுவை சார்ந்த சில பெருங்க வருவாங்க. அவங்க வரும்போது மஞ்ச சட்டை போட்ட நம்ம பசங்க அங்க இருப்பாங்க. அதை பாத்ததும் திமுக பெருசுங்க ஓடிப்போவாங்க” என்று வெளிப்படையாக மிரட்டனார்.தந்தையின் அடியொற்றி மகன் அன்புமணி ராமதாசும் அப்படியே பேசி வருகிறார்.

சனநாயக அரசியலில் தந்தை- மகனின் செயல்பாடுகள் வருந்தக்கூடியதாக அநாகரீகத்தின் உச்சமாக இருக்கிறது.வன்முறையை தூண்டும் விதமாக பேசிய கருணாசை கைது செய்து சிறைப்படுத்திய இந்த அதிமுக அரசு,ஏன் ஊடகவியலாளர்களை வெளிப்படையாக “வெட்டுவேன்” என்று மிரட்டிய மருத்துவர் ராமதாஸ் மீது இன்னமும் வழக்குப்பதிவு செய்யவில்லை?

கருணாசுக்கு ஒரு சட்டம்?ராமதாசுக்கு ஒரு சட்டமா?ஊடகவியலாளர்கள் தங்களது சனநாயக கடமையாற்ற முனையும் போது இப்படி மிரட்டினால் எப்படி அவர்கள் கடமையாற்ற முடியும்?
சனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றான ஊடகங்களை வன்முறை மூலமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராமதாசு முயற்சிக்கிறாரா?
அல்லது ஊடகவியலாளர்கள் கேட்பார் இல்லாத சமூகமா?

மருத்துவர் ராமதாஸ் கடந்த ஏப்ரல் 25,2013 அன்று மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதை கண்டித்தஅன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 
ஏப்ரல் 29,2013 அன்று சட்டப்பேரவையிலேயே” பாமக வன்முறை கட்சி. வன்முறையை தூண்டும் விதமாக பேசிய ராமதாஸ் மீது இந்த அரசு வழக்குப்பதிவு செய்கிறது” என்று அறிவித்தார் . அதன்படியே கைதும் செய்தும் சிறைப்படுத்தினார்.சிறைக்குள் போனவர் அங்கு இருக்க முடியாமல் தனது மனைவி சரசுவதி அம்மையாரை விட்டு முதல்வர் 
ஜெயலலிதாவுக்கு “ ஏதோ தவறாக பேசிவிட்டார். அவரது உடல்நலம் கருதி விடுதலை செய்யுங்கள்” கடிதம் எழுத வைத்தார். அதன் பின்பு தான் இந்த வீராதி வீரர் ராமதாஸ் விடுவிக்கப்பட்டார்.

அப்படிப்பட்ட ராமதாஸ் தான்மீண்டும் வன்முறையை தூண்டும் விதமாக பேசி வருகிறார். வெறுப்பை கக்கி வருகிறார்.அம்மாவின் அடியொற்றி நடைபோடும் அரசு என்று மூச்சுக்கு மூச்சுக்கு பேசும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ராமதாசு மீது நடவடிக்கை எடுப்பாரா? ஜெயலலிதாவின் துணிச்சல்இந்த அதிமுக அரசுக்கு இருக்கிறதா?அதுவரை ஊடகங்களாவது ராமதாசின் செய்திகளை புறக்கணிக்கும் துணிச்சல் இருக்கிறதா?குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்கும் வரையாவது தயாரா?’ என்கிறார் வன்னி அரசு.