அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அமைப்பதற்கு கமலா ஹாரீஸ் தனிக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கும், துணை அதிபராகத் தேர்வு ‌‌செய்யப்பட்டிருக்கும் இந்திய வம்சாவளியைச் சார்ந்த கமலா ஹாரிஸுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜோ பைடனின் வெற்றி வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்கவில்லை என்பதையும் இந்தியாவில் ட்ரம்ப்பை ஆதரித்த மோடிக்கு இதுவொரு படிப்பினை என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


உலகில் ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை மென்மேலும் பல்கிப் பெருக இவரின் வெற்றி உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றிருக்கிறார். அதுபோலவே, அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்க இருக்கிறார். இது ஜனநாயகத்தின் மீது அமெரிக்கவாழ் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
கடந்த நான்காண்டு கால ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டார்கள். அத்துடன், அறிவியலுக்கு எதிரான அவருடைய நிலைப்பாடு அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பெருந்தொற்று பரவுவதற்கும், பெருமளவில் மரணங்கள் நிகழ்வதற்கும் காரணமாக அமைந்தது. ட்ரம்ப்பின் மிக மோசமான வெறுப்பு அரசியலால் கறுப்பின வாக்காளர்களில் 90 சதவீதத்துக்கும் மேலானவர்கள் ஜோ பைடனுக்கு வாக்களித்துள்ளனர். அத்துடன், அனைத்துத் தரப்பு இளைஞர்களும் பைடனுக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர்.