பாராளுமன்றத் தேர்தலில் எப்படி இந்த கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டினார்களோ அதைப்போலவே சட்டமன்ற தேர்தலிலும் இக்கூட்டணியை மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள் என்பது உறுதி என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக- அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்று கூட பாராமல் துணை முதலமைச்சர் அறிவிப்புச் செய்து இருக்கிறார். அதை முதலமைச்சரும் ஆமோதித்து இருக்கிறார். இந்தக் கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். பாராளுமன்றத் தேர்தலில் எப்படி இந்த கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டினார்களோ அதைப்போலவே சட்டமன்ற தேர்தலிலும் இக்கூட்டணியை மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள் என்பது உறுதி.

தமிழ், தமிழர் நலன், தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து எதிராக இருக்கும் ஆட்சி மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியைத் திணிப்பது; தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளிலெல்லாம் வடமாநிலத்தவருக்கு வழங்குவது; தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியைத் தர மறுப்பது; தமிழ்நாட்டின் அதிகாரங்களில் தலையிடுவது எனத் தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு செய்து வரும் துரோகப் பட்டியல் மிகவும் நீளமானது.

