சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி அங்கீகரிக்கப்படவில்லை என்பதால், தேர்தல் ஆணையம் சின்னத்தில் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக கடந்த முறை போட்டியிட்ட மோதிரம் சின்னத்தை விசிக எதிர்பார்த்தது. ஆனால், அந்த சின்னம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து வைரம், பலாப்பழம், மேசை எனப் பல சின்னங்களை விசிக கேட்டிருந்தது. இறுதியில் பானை சின்னத்தை ஒதுக்கி கொடுத்தது தேர்தல் ஆணையம்.


சின்னம் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதால், அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் மட்டுமே விசிக தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள பானை சின்னத்தில் போட்டியிடுகிறது. தேர்தலுக்கு இன்னும் 27 நாட்கள் மட்டுமே உள்ளதால், அந்தச் சின்னத்தைப் பிரபலப்படுத்த வேண்டிய நிலையில் அக்கட்சி உள்ளது.
இதன் காரணமாக, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் விசிகவினர் பானைகளுடன் ஓட்டு கேட்க முடிவு செய்துள்ளார்கள். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பானை சின்னத்தை பிரபலப்படுத்தும் பணிகளில் விசிகவினர் ஈடுபட இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கூறும்போது, “சிதம்பரம் தொகுதியில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பானைகளை கையில் எடுத்துக்கொண்டு பிரசாரம் செய்ய இருக்கிறோம். இதற்காக சுமார் ஒரு லட்சம் பானைகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
கிராமிய நடனங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமும் பானை சின்னத்தைப் பிரபலப்படுத்தும் திட்டங்களை விசிகவினர் கைவசம் வைத்துள்ளனர். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டதால், அத்தொகுதியில் பானைக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் சுமார் ஒரு லட்சம் பானைகளை விசிகவினர் பயன்படுத்த உள்ளதால், அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.