’பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துராஷ்டிர கனவை செயல்படுத்த மாநில உரிமைகள் தடையாக முன்னிற்கும்.அந்த தடையை உடைக்கும் முதலடி தான் இன்று காஷ்மீரத்தை உடைத்திருப்பது’என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தந்து முகநூல் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கிடையே அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்த இருவேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தனது கருத்தை முகநூலில் சில நிமிடங்களுக்கு முன்னர் பதிவு செய்த வன்னி அரசு,...கடந்த ஐந்தாண்டுகளாக விடுதலைச்சிறுத்தைகள் மட்டுமே. பாஜகவின் மறைமுகச்செயல் திட்டத்தை அம்பலப்படுத்தியே வருகிறோம்.அது தான் அதிபர் ஆட்சி முறை.பாஜக இனி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்காமல் அதிபர் ஆட்சிமுறையை தான் நடைமுறை படுத்துவார்கள் என்று சனவரி 23,2018 அன்று திருச்சியில் நடைப்பெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் எச்சரிக்கை விடுத்தார் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன்.இன்று அதை நோக்கி காய் நகர்த்துகிறது பாசிச பாஜக அரசு.

இந்தியா பாகிஸ்தானுக்கிடையேயான ஆடு புலி ஆட்டத்தில், காஷ்மீரத்தை ஆண்ட ஹரிசிங் மன்னனிடம் கொடுத்த வாக்குறுதி தான் காஷ்மீரத்துக்கான சிறப்புச்சட்டம்( 35A, 370).இந்தியா கொடுத்த அந்த வாக்குறுதியை பாஜக அரசு பறித்துக்கொண்டது.தனி நாடாக இருக்க வேண்டிய காஷ்மீரத்தை இந்தியா துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரத்து இளைஞர்களின் குறுதி தோய்ந்த போராட்டம் காஷ்மீரிகளின் உரிமை போராட்டம். தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டும் காயடிக்கப்பட்டுமே வந்துள்ளனர் காஷ்மீரிகள்.
நாடாளுமன்றத்தில் திடுமென காஷ்மீரத்தை உடைத்து அறிவித்து விட்டது பாஜக.

அடுத்து அவர்களது அறிவிப்பு 1956, நவம்பர் 1 அன்று மொழிவழி மாநிலம் பிரித்த போது வழங்கிய மாநில உரிமைகளை பறிப்பதாகத்தான் முடியும். அந்தந்த மாநிலங்களின் அதாவது தேசிய இனங்களின் மொழி வளர்ச்சி, உரிமைகள் குறித்த சட்டப்பிரிவான 300 ஐ ரத்து செய்தாலும் செய்வார்கள் போல. ஏனென்றால் பாஜகவின் தாய் அமைப்பான RSSன் இந்துராஷ்டிர கனவை செயல்படுத்த மாநில உரிமைகள் தடையாக முன்னிற்கும்.அந்த தடையை உடைக்கும் முதலடி தான் இன்று காஷ்மீரத்தை உடைத்திருப்பது.

இது இந்திய சனநாயகத்துக்கும் அரசியலமைப்புச்சட்டத்துக்கும் எதிரானதாகும். பாஜகவின் இந்த பாசிச வேட்டையை சனநாயகவாதிகள் தடுத்து நிறுத்துவோம்.காஷ்மீரிகளிடம் காஷ்மீரத்தை ஒப்படைத்துவிட்டு இந்தியா வெளியேற வேண்டும்’என்று காட்டமாக எழுதியிருக்கிறார்.