Asianet News Tamil

மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசு..!! கொரோனா காலத்தில் அவரச சட்டம்..!!

பாராளுமன்றம் கூடும் போது இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு தேவையெனில் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு உரிய திருத்தங்களுக்குப் பின்பே சட்டம் ஆக்கப்பட வேண்டும். 

vck party condemned central government new act on cooperative bank
Author
Chennai, First Published Jun 25, 2020, 7:55 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டம் கொரோனா பேரிடர் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரப் பறிப்பில் ஈடுபடுவதற்கான முயற்ச்சி என  மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் :- இந்தியாவிலுள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது.  இது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். இந்த அவசர சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது வங்கிகளை முறைப்படுத்தல் ( திருத்தச் சட்ட)  மசோதா 2020 எனும் சட்ட மசோதா மக்களவையில் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனா  நெருக்கடியினால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  முன்னதாகவே முடிக்கப்பட்டதால் அது அப்போது சட்டம் ஆக்கப்படவில்லை.

 

இந்நிலையில், கொரோனா  பேரிடர் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் விதமாக இப்போது அந்த மசோதாவை அவசர சட்டமாக மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது.  அதுமட்டுமின்றி மாநில கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு 'பிஎம்சி' வங்கி திவால் ஆனதைத் தொடர்ந்து மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது.  அந்தச் சூழலில் அந்த வங்கியில் டெபாசிட் வைத்திருந்தவர்களுக்கு  எந்த நிவாரணமும் அளிக்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டது.  இதைத்தொடர்ந்து கூட்டுறவு நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.  அதன் அடிப்படையிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கிராமப்புற கூட்டுறவு சங்கங்கள் விவசாய கூட்டுறவு சங்கங்கள் தவிர வங்கிகள் என்று பெயர் வைத்து உள்ள அனைத்து நிறுவனங்களையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது. 

அதுமட்டுமின்றி இந்த கூட்டுறவு வங்கிகளின்  பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கும் அதில் வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  இதில் இயக்குனர் மற்றும் பிற அலுவலர்களை நியமிப்பதும் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.  ஏற்கனவே கூட்டுறவு வங்கிகள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  அவற்றையெல்லாம் இப்போது நேரடியாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போயிருக்கிறார்கள்.  இது மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் செயலாகும். மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல்  அதிகாரத்தைப் பறிக்கும் இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு இந்தச் சூழலில் பிறப்பித்திருந்தது ஏற்புடையது அல்ல. பாராளுமன்றம் கூடும் போது இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு தேவையெனில் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு உரிய திருத்தங்களுக்குப் பின்பே சட்டம் ஆக்கப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு குறுக்கு வழியில் இன்றைக்கு கூட்டுறவு வங்கிகளைக் கையகப் படுத்தும் விதமாக நடவடிக்கை எடுத்திருப்பது அதிகார அத்துமீறல் ஆகும். இதைத் தமிழக அரசு கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஏற்கனவே பொதுத்துறை வங்கிகள்  பலவற்றை இணைத்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமின்றி அவற்றைத் தனியார் மயமாக்குவதை நோக்கி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

 

இப்போது கூட்டுறவு வங்கிகளிலும் கை வைத்துள்ளது. இதையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் நோக்கத்தோடு இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்க கூடாது என்றும், தமிழக அரசும் தனது எதிர்ப்பை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios