மே18- சர்வதேச இனப்படுகொலை நாளில்  தற்காப்புக்குத் தள்ளி நிற்போம் , இனமீட்சிக்கு இணைந்து நிற்போம் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது , அதில் கூறப்பட்டுள்ளதாவது :- மனிதகுலத்தையே நடுங்கவைக்கும் கொடிய உயிர்க்கொல்லி கொரோனாவின் நெருக்கடியை எதிர்கொள்ளும் இவ்வேளையில், நாளை(மே18) முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும்  இங்கே  நினைவு கூரவேண்டிய நிலை தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட உலகநாடுகள் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தீவிரமான முழுஅடைப்பில் ஈடுபட்டு  முடங்கிக்கிடக்கின்றன. வெவ்வேறு செயல்திட்டங்களுடன் வெவ்வேறு வேகத்தில் வெவ்வேறு களத்தில் "போட்டி உளவியலோடு" இயங்கிவந்த உலகநாடுகளுக்கெல்லாம், தற்போது, கொரோனாவைத் துடைத்தெறிவதே ஒற்றைச் செயல்திட்டமாக மாறிப்போனது. 

இந்தியாவும் கடந்த இருமாதங்களாக முழுஅடைப்பில் உள்ளது. அதனால், வழக்கம்போல ஓரிடத்தில் ஒன்றுகூடி வீரவணக்கம் செலுத்தி, உறுதிமொழி ஏற்பது இயலாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், 2009, மே17அன்று களப்பலியான ஈழவிடுதலைப் போராளிகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் யாவருக்கும், இணையவழி இணைந்து வீரவணக்கம் செலுத்துவது நம் கடமையாகும். எனவே, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மே17 மற்றும் மே18 ஆகிய இரண்டுநாள்களில் இணையவழியாக வீரவணக்க நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. அதாவது, மே17-அன்று, மாலை 6.00 மணியளவில் "இணையவழி கருத்தாடல்" நிகழ்வும், மே18- அன்று மாலை 5.00 மணியளவில் "ஈகச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்துதல்"  நிகழ்வும் நடைபெறவுள்ளன. இவ்விரு நிகழ்வுகளிலும் அவரவர் இல்லங்களில் இருந்தவாறே  பங்கேற்க வேண்டும். இவை வலியால் கடைபிடிக்கப்படும் வருடாந்த சடங்கல்ல; வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் சங்கல்பம் ஆகும். 

மே17- அன்று நடைபெறவுள்ள இணையவழி கருத்தாடலில் ஈழமண்ணிலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் சிலர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.ஈகச்சுடர்களை நினைவுகூர்வதும் ஈழவிடுதலைக் கருத்தியலை அடைகாப்பதும் நம்கடமை என்பதை உணர்ந்து இந்நிகழ்வுகளில் பங்கேற்போம். கொரோனா நெருக்கடியிலிருந்து மனிதகுலத்தைக் காப்பதும் நசுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடுவதும்   ஒரே வேளையில்  நாம் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் என்பதைப் புரிந்து உறுதியேற்போம். தற்போது, கொரோனாவிலிருந்து 
தற்காப்புக்குத் தள்ளிநிற்போம்! இனமீட்சிக்கு இணைந்துநிற்போம்! அதில் கூறப்பட்டுள்ளது.