புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர்  திரும்புவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மத்திய- மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார். கொரோனா நோய்த்தொற்றுப்  பரவாமல் தடுப்பதற்கு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் மிகப்பெரும் சவாலாகவும்- தடையாகவும்  இருப்பது புலம்பெயர் தொழிலாளர்களுடைய பிரச்சினையே ஆகும்.  அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால்தான் சமூகப் பரவல் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மே 3ஆம் தேதிக்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் தமது ஊர்களுக்குத் திரும்புவதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவ்வாறு ஊர் திரும்புவதற்கு முன்னதாகவே  அவர்களுக்கு நோய்த் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்கான ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு மாநிலங்களில் இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அடைபட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநில அரசுகள் தம்மால் இயன்ற  உதவிகளைச் செய்கிறார்கள் என்றாலும் அவை போதுமானவையாக இல்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்களும்  கொரோனா நோய்த் தொற்று ஆபத்து உள்ள இடங்களாக உள்ளன என்கிற புகார்கள் எழுகின்றன. எனவே, அவர்களை மேலும் அங்கேயே அடைத்து வைத்திருப்பது அரசாங்கம் எடுக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையே சீர்குலைத்து விடும். ஆகவே,  மே3ஆம் தேதிக்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் தமது ஊர்களுக்கு திரும்பிப் போவதற்கு மத்திய மாநில அரசுகள் படிப்படியான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். 

அப்படி ஊர் திரும்பும் அவர்களைக் குறிப்பிட்ட நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைப்பது அவசியமானதாகும். அதற்குரிய முன்னேற்பாடுகளை இப்போதே மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.  ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும்போது கிராமப்புற பொருளாதார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.  அங்கிருந்து அதைத் தொடங்குவது தான் சரியாக இருக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை. 2020 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நூறுநாள் வேலைத் திட்டத்துக்கு 61500 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது. அது 2019 இல் ஒதுக்கப்பட்ட தொகையைவிட 13.4% குறைவாகும். இந்தக் குறைவான நிதியை வைத்துக்கொண்டு ஒருவருக்கு 10 நாள்கூட வேலை தரமுடியாது. எனவே, மத்திய அரசு இந்த ஒதுக்கீட்டை இரு மடங்காக உயர்த்தவேண்டும். 

இந்த ஆண்டுக்கான நிதியை ஒரே தவணையில் மாநிலங்களுக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழக அரசு நூறுநாள் வேலை துவங்கப்படும் என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.  ஒரு கிராமத்தில் எத்தனை நாள் வேலை அளிக்கப்படும்,  அதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது பற்றிய எந்த விவரமும் அந்த அறிவிப்பில் இல்லை. குறைந்தபட்சம் 50 நாட்களுக்காவது தொடர்ந்து வேலை வழங்கப்படவேண்டும், அதில் 15 நாட்களுக்கான ஊதியத்தையாவது முன் பணமாகக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மீண்டும் வலியுறுத்துகிறோம். தமது ஊர்களுக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களை எப்படிக் கையாள்வது என்பது பற்றிய தெளிவான செயல் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும்  வலியுறுத்துகிறோம்.