கொரோனா நோய்த்தொற்றுப் பிரச்சனையைக் காரணமாகக் காட்டி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பன்னெடுங்காலப் போராட்டத்தின் விளைவாக ஈட்டிய அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க மே நாளில் உறுதி ஏற்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம் என அக் கட்சியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில,   அமைப்புசாரா தொழிலாளர்கள் கொரோனா நோய்த்தொற்றுப் பிரச்சினையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்ட காரணத்தினால் அவர்கள் உணவுக்கே வழியின்றி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களில் பணியாற்றும் 11 கோடி பேர் இப்படி அல்லல்பட்டு வருகின்றனர்.  இவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு வழி செய்ய வேண்டிய அரசு அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் பெருமுதலாளிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதிலேயே கவனமாக இருக்கிறது. 

அண்மையில் ரிசர்வ் வங்கியால் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள 50 முதலாளிகளின் பட்டியல் அம்பலமாகியிருக்கிறது. அவர்கள் செலுத்தவேண்டிய  வாராக்கடன் 68,000 கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. இந்த தொகையைக் கொண்டு இந்தியா முழுமைக்கும் இருக்கிற ஏழை மக்களுக்கு ஒவ்வொருவரது குடும்பத்துக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியும்.  உணவுக் கிடங்குகளில் மட்கிக் கொண்டிருக்கிற தானியத்தைக்கூட எடுத்து ஏழை மக்களுக்கு கொடுக்க மனம் இல்லாத பாஜக அரசு, கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற முதலாளிகளுக்கு 68,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்திருப்பது மிகப்பெரும் அநீதியாகும். அமைப்பு சாரா தொழிலாளர் நிலை மட்டுமல்ல;  ஒருங்கு திரட்டப்பட்ட அரசு ஊழியர்களின் உரிமைகளும் பறிபோகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நிறுத்திவைத்து பாஜக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும். 

 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைப் பின்பற்றி தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும் மாநில அரசு ஊழியர்களுடைய அகவிலைப்படியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. சில மாநில அரசுகள் சம்பளப் பிடித்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன. கேரள அரசு ஒரு மாத சம்பளத்தை 5 தவணைகளில் பிடிக்கப் போவதாக ஆணை பிறப்பித்தது. அதை இப்பொழுது கேரள மாநில உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. இப்படி அரசு ஊழியர்களின் உரிமைகளும் மத்திய, மாநில அரசுகளால் பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயிருக்கு ஆபத்து, இன்னொருபுறம் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் காரணமாக வாழ்வாதாரத்துக்கு ஆபத்து என்ற இருமுனை தாக்குதலை இன்றைக்கு இந்திய தொழிலாளி வர்க்கம் எதிர்கொண்டுள்ளது. 

இந்நிலையில், பன்னெடுங்காலமாக வீரம் செறிந்த போராட்டங்களின் விளைவாக ஈட்டப்பட்ட உரிமைகளைப் பறிக்கும் மத்திய- மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை முறியடித்து, உழைக்கும் வர்க்கத்திற்கான  உரிமைகளைப் பாதுகாப்போம்  என்று  மே நாளில் உறுதி ஏற்கிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.