இந்த வெற்றி அடுத்து வரும் பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையாது என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்தாகும். இந்த இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்ததுதான் காரணம் என பாஜக வினர் கூறுவது மிகச்சிறந்த நகைச்சுவை என்றே சொல்ல வேண்டும்
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி பெற்ற வெற்றி ஆதரவு அலையால் பெற்ற வெற்றி அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் இது குறித்து தெரிவித்துள்ள அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிகளான அதிமுக - பாஜக பெற்றுள்ள வெற்றி மக்கள் ஆதரவு அலையால் கிட்டியது என்று பொருள் அல்ல. வழக்கமாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி கையாளும் அனைத்துவகை வரம்புமீறல் தந்திரமே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரம்புமீறல்கள் யாவும் என்னவென்பது நாட்டுமக்கள் அறிந்ததே ஆகும்.

தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது என்பது வழக்கமானதாக இருக்கிறது. அந்த வெற்றியை ஈட்டுவதற்கு அவர்கள் கையாளும் தந்திரங்களைப் பற்றி தேர்தல் ஆணையமே பலமுறை குறிப்பிட்டுக் கவலை தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலிலும் அதே விதமான தந்திரங்களைக் கையாண்டுதான் தற்போது இடைத்தேர்தல் வெற்றிகளை ஆளும் கட்சி பறித்துள்ளது. எனவே, இதை பாஜக - அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு திரும்பிவிட்டது என எடுத்துக்கொள்ள முடியாது.

