அன்பு மழலை சுஜித் வில்சன் அகால மரணம். இவன் சாவு விபத்தா? கொலையா? எதேச்சையாய் நடந்த விபத்து என்று இதனைக் கடந்துபோகவும் இயலவில்லை; மூத்தவர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்த பலி அல்லது கொலை என்று எவர்மீதும் பழிசுமத்தவும் இயலவில்லை! ஏதுமறியா அந்தப் பச்சிளங்குழந்தைக்கு இந்தக் கொடூரம் நேர்ந்தமைக்கு யார்தான் பொறுப்பு? 

பாசனத்திற்காகத் தண்ணீரைத் தேடிப் பலநூறடிகள்  அந்த ஆழ்கிணற்றை ஆறேழு வருடங்களுக்கு முன் தோண்டிய அவனது தந்தைவழி பாட்டனார்களா? அறுநூறு அடிகளுக்கும் மேலாக ஆழம் தோண்டியும்  பயனற்றுப்போன அக்கிணற்றை அரைகுறையாய் மூடிய விவரம் தெரியாத அவனது தாய்-தந்தையின் அறியாமையா? ஊருக்கு வெளியே, குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத வகையில், விவசாயம் செய்யும் நிலத்திலேயே வீடுகட்டி வசிக்கும் வாழ்க்கைமுறையா? ஆழ்துளை கிணறுகளைத் தோண்டுவது மற்றும் பயனற்ற நிலையில் அவற்றை மூடுவது ஆகியவற்றின் தொடர்பாக இதுவரை உரிய சட்டங்களை இயற்றித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத ஆட்சியாளர்களின் அக்கறையற்ற போக்கா? இத்தகைய பேரிடர்கள் நேரும்போது உடனடியாக உயிரைக்காக்கும் உயரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இன்னும் வழிவகை காணாத மைய- மாநில அரசுகளின் மெத்தனப்போக்கா?  யாரைப் பழிக்க இயலும்?  

ஏதோவொரு வகையில் நாம்தானே அதற்குப் பொறுப்பேற்றாக வேண்டும்? மரணம், பாவத்தின் சம்பளம்‘ என்பர்.  அந்தப் பால்மணம் மாறாத பிஞ்சுக் குழந்தை அப்படி என்ன பாவம் இழைத்தது? ஏன் இப்படியொரு ஈவிரக்கமில்லா குரூர சாவு அச்சிறுவனுக்கு? 
ஆழாக்கு போன்ற ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து பேரிடரில் சிக்கிக்கொண்ட அவன் நெஞ்சம் எப்படியெல்லாம் படாதபாடு பட்டுப் பதறியதோ? அவன் கையளவு இதயம் எப்படியெல்லாம் துடியாய்த் துடித்ததோ? மண்ணும் சேறும் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் பைகளை நிறைத்ததில் அவன்மூச்சு எப்படியெல்லாம் முட்டிமோதித் திணறியதோ?  அவனைச் சூழ்ந்து கவ்விய அந்தக் கொடிய கும்மிருட்டு அவனை எப்படியெல்லாம் நடுநடுங்க வைத்ததோ? தன்னைக் காப்பாற்ற தனது தாயும் தந்தையும் தாவி வருவார்கள் என்று அவன் உள்ளம் எப்படியெல்லாம் தவியாய்த் தவித்ததோ?  உடன் வந்த அண்ணன் உள்ளே இறங்கி வந்து உயிர்காப்பான் என்று அவன் எண்ணம் எப்படியெல்லாம் அலைபாய்ந்ததோ? பேரிடியாய் இறங்கிய பேரதிர்ச்சிகளால் அவன் மூளை எப்படியெல்லாம் கலங்கி வெடித்துச் சிதறியதோ?  

மிகவும் குறுகலான விட்டத்தில், மிகவும் செங்குத்தான ஆழத்தில், மிகவும் ஒடுக்கமான துளையாகத் தோண்டப்பட்ட, மிகவும் ஆபத்தான கிணற்றில், கை கால்களை அசைக்கவும் இயலாத அவலத்தில் சிக்கிய சிறுவன் சுஜித், வறண்ட தொண்டைக்கு நீரின்றி, பசித்த வயிறுக்கு உணவின்றி, திணறிய மூச்சுக்குக் காற்றின்றி, அவிந்த விழிகளுக்கு வெளிச்சமின்றி உயிருக்குப் போராடி மாண்டு போனான். அவனைக் காப்பாற்ற இயலாத கையறுநிலையில் நாம். குற்ற உணர்ச்சி நெஞ்சைக் குமைந்து வாட்டுகிறது. 

நடுகாட்டுப்பட்டி சுஜித் மட்டுமல்ல; கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 13 மழலைகள் பலி! இந்தியா முழுவதும் எத்தனைப் பிஞ்சுகள் இப்படி பலியாயினவோ? அவ்வளவுக்கும் நாம்தானே குற்றவாளிகள்? நிலத்தடி நீர்மட்டம் சரிந்தததற்கும், பருவமழை பொய்த்ததற்கும், ஆழ்துளை கிணறுகளைத் தோண்டுவதற்கும், சுற்றுச்சூழலைச் சிதைத்ததற்கும் நாம்தானே பொறுப்பு?  மணல், தண்ணீர், எண்ணெய், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட அனைத்துவகை கனிமவளங்களுக்குமான சூறையாடல்களால் நாம் உருவாக்கும்  ஒவ்வொரு குழியும் நமக்குநாமே உருவாக்கிக் கொள்ளும் சவக்குழிகளே ஆகும்.

 நமது உயிருக்கும் பயிருக்கும் தண்ணீர்த் தேடி நாம் நடத்தும் போராட்டக்களத்தில் உருவாகும் ஆழ்துளை கிணறு போன்ற மரணக்குழிகளில்தான்  சிறுவன் சுஜித் வில்சன் உள்ளிட்ட ஏராளமானோரைப் பலிகொடுத்து வருகிறோம். ஆழ்துளை கிணறுகளைத் தோண்டாமலிருக்க முடியாது. இனிவரும் காலங்களில் ஆயிரம் அடிகளையும் தாண்டியே தோண்ட வேண்டிவரும். இத்தகைய பலிகளையும் மேலும் தொடர்நது சந்திக்க வேண்டிவரும். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை எவராலும் மாற்றிடவும் இயலாது.  அத்துடன், இன்று தொழில்வளம் என்னும் பெயரில் கனிமவளத்தைச் சூறையாடும் வெறியில், பூமியைச் சல்லடையாய்த் துளைத்துச் சுற்றுச்சூழலை மாசுப்படுத்திச் சிதைத்துப் பூமியை மென்மேலும் வெப்பமாக்கி அதன் உயிருக்கே உலை வைத்துக் கொண்டிருக்கிறோம். சுஜித் உயிரைக் காப்பாற்ற இயலாத நாம், உயிருக்குப் போராடும் பூமியைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறோம்? என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தன் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.