மனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தொட்டியை சுத்தம் செய்ய பணித்தவரை கொலை வழக்கில்  கைது செய்வதுடன் பலியான தொழிலாளிகளின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம்:- தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் மனிதக் கழிவு தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது ராஜா, பாலா, பாண்டி, தினேஷ் ஆகிய 4  தொழிலாளிகள்  நச்சு வாயுவில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். சட்டத்திற்கு எதிராகவும், உச்சநீதிமன்ற ஆணைக்கு புறம்பாகவும் தொழிலாளிகளை இப்படி மனித கழிவு தொட்டியில் இறங்கச்  சொல்லிய வீட்டு உரிமையாளர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.  

கழிவுநீர், மனிதக் கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது, தவிர்க்க இயலாத தேவையின் அடிப்படையில் அவ்வாறு எவரேனும் ஈடுபடுத்தப்பட்டால், அவர்களுக்கு முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து கருவிகளும் வழங்கப்பட வேண்டும். அருகில் ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மாநில அரசுகள் மதிப்பதில்லை, தொடர்ந்து இந்தப் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கருவிகளைக் கொண்டு சுத்தம் செய்வதைவிட மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்வதே மலிவாக இருக்கின்ற காரணத்தினால் தனிநபர்கள் தொடர்ந்து இந்தப் பணியில் துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்துவது தொடர்கிறது. 

இத்தகைய அவலம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனில் இவ்வாறு மரணம் ஏற்படும்போது இந்தப் பணியில் ஈடுபடுத்திய நபர்களை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். கழிவுநீர் தொட்டியில் நச்சுவாயுக் கசிவால் உயிரிழக்கும் தொழிலாளர்களின்  குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது, தற்போதைய சூழலில் அந்த தொகை போதுமானதல்ல, எனவே உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து நகர அமைப்புகளுக்கும் கழிவுநீர் அகற்றுவதற்கான கருவிகளை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். இதற்கு மேல் ஒருவர் கூட இத்தகைய விபத்தில்  உயிரிழக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.