ஆடி மாதம், தீபாவளி போன்ற சமயங்களில் டிவியில் வெளியாகும் சரவணா ஸ்டோர் விளம்பரங்களுக்கு ஒரு ரசிகர் கூட்டமே
உண்டு. ஏனென்றால் தமன்னா, ஹன்சிகா மோத்வானியை வைத்து விளம்பரம் எடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்த சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பிறகு அவர்களுடன் சேர்ந்து விளம்பர படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து தற்போது எல்லாம் நடிகைகள் இல்லாமல் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியே முழு பிராண்டாக விளம்பரங்களில் தோன்றி தனது நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்து வருகிறார். நடிகர்கள் பின்னால் செல்லாமல் அண்ணாச்சி தன்னை நம்பி களம் இறங்கியுள்ளதாக அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதே போல் நகைக்கடை விளம்பரம் என்றால் நடிகைகள் தான் என்பதை மாற்றி லலிதா ஜூவல்லரி உரிமையாளர் தனது கடை விளம்பரத்தில் தானே நடித்து வெற்றிக் கொடி நாட்டியுள்ளார். சரவணா ஸ்டோர் அண்ணாச்சியை போலவே லலிதா ஜூவல்லரி உரிமையாளருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக தனது நிறுவன விளம்பரத்தில் தன்னை மட்டுமே வைத்து வெற்றிப் பாதையை துவக்கியவர் வசந்த் அன்ட் கோ வசந்த குமார். சொல்லப்போனால் அதில் வெற்றியும் பெற்றார் அவர்.

இது எப்படி சாத்தியமானது என்றால்? வசந்த் அன்ட் கோ உரிமையாளர் வசந்தகுமார் அப்போது ஊர் ஊராக தனது கடைகளை திறந்த நேரம். அனைத்து ஊர்களில் உள்ள தனது அனைத்து கடைகளுக்கும் ஒரே அடையாளமாக ஒரு லோகோ வேண்டும் என்று வசந்தகுமார் முடிவு செய்தார். மேலும் பிரபல நடிகர் ஒருவரை தனது லோகோவில் பயன்படுத்தினால் பிரபலம் ஆகிவிடலாம் என்று சிலர் அவருக்கு யோசனை தெரிவித்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தனது கடைக்கு தான் தான் அடையாளம் என்று கூறி தன்னுடைய சிரித்த முகத்தையே லோகாவாக பயன்படுத்தினார்.

அன்று முதல் தற்போது வரை வசந்த் அன்கோ என்றால் அதற்கு வசந்தகுமார் அண்ணாச்சி தான் அடையாளம். அவர் நினைத்திருந்தால் தன்னிடம் உள்ள பணத்தின் மூலம் முன்னணி நடிகரை தனது விளம்பரத்தில் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் தன் மீது நம்பிக்கை வைத்து தன்னையே தனது கடைகளின் அடையாளம் ஆக்கி சாதனை படைத்தவர். அதோடு மட்டும் அல்லாமல் சன் டிவி, விஜய் டிவி, ராஜ் டிவிகளில் விளம்பரம் ஒளிபரப்ப அதிகம் பணம் கேட்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்கு தனியாக டிவியே ஆரம்பித்து தனது நிறுவன விளம்பரங்களை அதில் ஒளிபரப்பியவர் வசந்தகுமார். இப்படி வசந்தகுமார் உழைப்பால் உயர்ந்தது மற்றும் அவரது தன்னம்பிக்கைக்கு எவ்வளவோ உதாரணங்களை கூறிக் கொண்டே போகலாம்.