பிரதமர் மோடியிடம் கூட செருப்பை காட்டுவார் சீமான். ஆனால் அப்படிப்பட்ட அநாகரிக அரசியல் எங்களுக்கு தெரியாது என்று விசிகவின் வன்னி அரசு அதிரடியாக கூறி உள்ளார்.
சென்னை: பிரதமர் மோடியிடம் கூட செருப்பை காட்டுவார் சீமான். ஆனால் அப்படிப்பட்ட அநாகரிக அரசியல் எங்களுக்கு தெரியாது என்று விசிகவின் வன்னி அரசு அதிரடியாக கூறி உள்ளார்.

கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வு தான்… ஆனாலும் இப்போதும் பேசப்படும், விமர்சிக்கப்படும் சம்பவம் ஆக இருக்கிறது சீமான் செருப்பை காட்டிய விவகாரம்.
இது வேண்டுமென்றே முன் வைக்கப்படும் அல்லது திட்டமிடப்பட்ட அரசியல் செயல்பாடு என்றும், இளைஞர்களை உசுப்பேற்றவே சீமான் இதுபோன்று பேசியதாகவும் பலரும் கருத்து கூறி வருகின்றனர். என்னை ஜனநாயகவாதியாக இருக்க வேண்டும் என்பதை பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.
ஆனால் என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம் என்று சீமான் பேசி வைக்க இன்னமும் அதை முன் வைத்து இணைய ஊடகங்களில் பலரும் தாளித்து வருகின்றனர். கட்சியின் தலைவரானவர் இப்படி பொதுவெளியில் அநாகரிகமாக, அதுவும் செருப்பை தூக்கி காட்டலாமா? என்று விமர்சனங்களுக்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. பாஜகவின் பி டீம் சீமானும், நாம் தமிழர் கட்சியும் என்ற குற்றச்சாட்டுகளும் முற்று பெறவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் வரும் 12ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. அவரின் வருகைக்காக பாஜக காத்திருக்க, திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற விவாதங்களும் ஓடி கொண்டு இருக்கின்றன. கோபேக் மோடி என்று அலற வைத்த திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஏன் இப்போது அமைதியாக இருக்கின்றன என்ற கேள்விகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியின் தமிழகம் வருகை பயணம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு, கூட்டணி கட்சிகளின் மனோநிலை என்ன என்பது பற்றிய கேள்விகள் எழுந்தன. இந் நிலையில் சீமானை ஏகத்துக்கும் குற்றம்சாட்டியும் விமர்சித்தும் விசிகவின் வன்னி அரசு பேசி உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:

ஒவ்வொருத்தருக்கும் கோ பேக் என்று சொல்வதற்கு உரிமை இருக்கிறது. பாஜக அரசை எதிர்ப்பதற்கும் ஒவ்வொருத்தருக்கும் உரிமை இருக்கிறது. அண்ணனுக்கு (சீமான்) வந்து செருப்பை கூட தூக்கி காட்டும் துணிச்சல் இங்கே இல்லை… பிரதமர் மோடியிடம் கூட காட்டலாம்.
அவருக்கு கராத்தே தெரியும், குங்பூ தெரியும். அவருக்கு பச்சை மட்டையை உரிக்க தெரியும். ஆனால் அது எங்களுக்கு தெரியாது.
நாங்கள் ஒரு நாகரிமான அரசியலை, ஒரு முதிர்ச்சியான அரசியலை நடத்தி கொண்டு இருக்கிறோம். இது போன்று செருப்பை காட்டும் அரசியலை நாங்கள் பண்ணமாட்டோம். கருத்தியல் ரீதியாக பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் திமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள். பாஜகவை வீழ்த்துவது ஒன்று தான் எங்களின் இலக்கு.

ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்று சொன்னவர் ஸ்டாலின். கொள்கை ரீதியாக அல்ல, கருத்தியல் ரீதியாக பேசுகிறோம், சனாதனத்தை எதிர்ப்பது தான் எங்கள் இலக்கு என்று வன்னி அரசு கூறினார்.
வன்னி அரசின் இந்த கருத்துகளுக்கு பதில் கருத்து கூறும் பலரும், சம்பந்தமே இல்லாமல் சீமானை பற்றி பேசுகிறார் என்று குற்றம்சாட்டி இருக்கின்றனர். பிரதமரின் வருகை தமிழகத்துக்கு மேன்மை அளிக்கிறது என்பதால் மென்மையாக இருக்கிறோம் என்று திமுக சொன்னபிறகும், விசிக சீமானை பற்றி ஏன் பேச வேண்டும் என்றும் கேள்விகளை பலர் கேட்டு வருகின்றனர்.
