Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு நாள் விவகாரம்… முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அட்வைஸ் சொல்லும் வானதி சீனிவாசன்!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்களுக்கு இடமளிக்காமல் நவம்பர் 1 ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

vanathi srinivasan about tamilnadu day
Author
Tamil Nadu, First Published Nov 1, 2021, 1:48 PM IST

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாடு முழுவதும் எழுந்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.  அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1 ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலதரப்பிலும் நவம்பர் 1 ஆம் தேதி எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்து, ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டது. இந்நாளினை பெருமைப்படுத்தும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி, 'தமிழ்நாடு நாள்' என்று சிறப்பாக கொண்டாடப்படும் என்று கடந்த 2019 ஜூலை 20 ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்ற அன்றைய திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மாநிலம் என்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1967 ஜூலை 18 ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் இனி ஆண்டுதோறும் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

vanathi srinivasan about tamilnadu day

1956 நவம்பர் 1 ஆம் தேதி தமிழ் மொழி பேசும் மக்களை கொண்ட மாநிலம் உருவாக்கப்பட்ட நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும். 1967 நவம்பர் 18 ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1969 ஜூலை 18 ஆம் தேதி தான் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றப்பட்டது. ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளை அல்ல. இதனை பல்வேறு தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்களுக்கு இடமளிக்காமல் நவம்பர் 1 ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்.  குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே அறிக்கைகள் வெளியிடும் சிலரின் வேண்டுகோளை ஏற்று வரலாற்றை மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இன்று தமிழ்நாடு நாள். தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான தமிழகத்தின் வளர்ச்சிக்கு உழைக்க இந்நாளில் உறுதியேற்போம் என தனது அறிக்கையில் கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios