சசிகலா தயவில் திருவாடானைத் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏவான கருணாஸ் சற்று கெத்தாகவே நடந்து கொண்டு வந்திருக்கிறார். அவர் குடியிருக்கும்  சாலிகிராமம், மற்றும் வளசரவாக்கம் பகுதியில் எந்தப் பஞ்சாயத்தையும் பேசி முடிக்கும் வல்லமை அவரது குரூப்புக்கு உண்டு.

வட்டித் தொழில், கருப்பட்டி வியாபாரம் என சற்று தெம்பாகவே இருந்துள்ளார் கருணாஸ். முக்குலத்தோர் புலிப்படை என்கிற பெயரில் பத்துப் பதினைந்து பேர் கொண்ட கும்பலோடு தெருக்களில் வலம் வருவதாக கூறப்படுகிறது.

திரைப்படங்களில் வருவதைப் போல சாலையின் குறுக்கே காரை நிறுத்திக் கொண்டு, அவரது ஆதரவாளர்கள் மது அருந்துவதும், ரோடில் போவோர் வருவோரை அடிப்பதும் என தொடர்ந்து அடாவடியாக  நடந்து கொள்வார்கள் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருணாசின் ஆதரவாளர்கள் மீது எதாவது புகார் வந்தால், போலீசாரே பேசி சமாதானம் செய்வதும், அதை மீறி புகார் பதிவு செய்யப்பட்டால், முக்குலத்தோர் புலிப்படையின் வழக்கறிஞர் குழு நேரடியாக போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று, காவலர்ளை மிரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது..

அண்மையில் விருகம்பாக்கம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை கருணாஸ் ஆதரவாளர்கள்  கெட்ட வார்த்தையால் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்டப் பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு போன்ற பல புகார்கள் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் மீது உள்ளதால் போலீசாரும் அவர்கள் மீது கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஓன்றரை ஆண்டுகளாகத்தான் கருணாசின் நடவடிக்கை இப்படி மாறிப் போனதாக சொல்லும் அப்பகுதி மக்கள்  தற்போது அவரது ஆட்களின்  அடாவடித் தனங்கள் அடக்கி வைக்கப்பட்டிருப்பதாக  பொது மக்கள் கருதுகின்றனர்.