பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயி நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயது மூப்பு காரணமாக அவர் கடந்த 16 ஆம் தேதி மரணமடைந்தார்.

வாஜ்பாயின்  மறைவுக்கு  குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.  அவரின் இறுதி ஊர்வலத்தின் போது அமித் ஷா மற்றும் மோடி 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.

இந்நிலையில் வாஜ்பாயின்  அஸ்தி நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு பாஜகவின் அந்தந்த மாநில தலைவர்களிடம்  அஸ்தி ஒப்படைக்கப்பட்டது. நாடு முழுவதும் வாஜ்பாயின் மரணத்துக்கு 7 நாள் துக்கம் அனுஷ்டிக்கபபட்டது.

இந்தநிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்தை பிரதமர் நரேந்திர மோடியும்,  பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக அவரின் மருமகள் கருணா சுக்லா குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கருணா சுக்லா, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்தை  அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தும் வகையில் பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் கீழிறங்கி வந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை கருத்தில் வைத்துக்கொண்டே அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஊர்வலத்தில் நடந்து சென்றனர் என குறிப்பிட்டார்.. 

அவருக்காக 5 கி.மீ நடந்து சென்றவர்கள் அவரின் கொள்கைகளுக்காக 2 அடிகள் கூட எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும். அனைவரது உண்மை முகத்தை அறிந்து கொண்டுள்ள மக்கள் நடக்க இருக்கும் தேர்தலில் பதில் அளிப்பார்கள் என்றும் கருணா சுக்லா.தெரிவித்துள்ளார்.

சட்டீஸ்கர்  மாநிலம் அமைய முக்கிய காரணமாக இருந்தவர் வாஜ்பாயி. ஆனால் அம்மாநில முதலமைச்சர் ராமன் சிங் வாஜ்பாய் இறந்த பிறகு அவரின் பெயரில் பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார். அவர் மறைவிற்கு முன்பே ஏன் அதனை செய்யவில்லை எனவும் கருணா சுக்லா கேள்வி எழுப்பியுள்ளார்.