தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக சிபிஐ கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கருப்பு பலூன்களை பறக்க விடப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மோடி கடந்த முறை தமிழகத்துக்கு வந்த போது, அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என கூறி ‘Goback Modi’ என்ற ஹேஸ்டேக் போட்டு டுவிட்டரிலும், அரசியல் கட்சியினர் கருப்பு பலூர் பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ``டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், கெயில் கேஷ், ஹைட்ரோகார்பன் போன்றவற்றை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு, அந்தத் திட்டத்துக்கு ஸ்டெர்லைட் போராட்டத்துக்குப் பிறகும் வேதாந்தா நிர்வாகத்துக்கு மீண்டும் இரண்டு இடத்தில் அனுமதியளித்து, வேளாண் மண்டலமான டெல்டாவை பெட்ரோலிய பொருளாதார மண்டலமாக மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. மேகதாட்டூவில் கர்நாடக அணை கட்டுவதை உச்சநீதிமன்றம் தடுத்தாலும் நிச்சயம் அவர்கள் அணையைக் கட்டுவது உறுதி. இதற்குத் திட்டம் வகுத்துக்கொடுத்தது பி.ஜ.க அரசுதான். 

2015-ம் ஆண்டு மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் வீட்டில் இரண்டு நாள் கர்நாடக அமைச்சர்கள் எல்லோரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியது. அதில் பி.ஜே.பி அரசு மேக்கே தாட்டூ அணை கட்ட வெளிப்படையாக அனுமதி அளிக்கமாட்டோம் எனத் தெரிவித்த நிலையில், அவர்களும் மறைமுகமாகப் பணிகளைத் தொடங்கினார்கள். மீத்தேன் போன்ற திட்டங்களால் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய் வரும். அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கும் வருவாய் கிடைக்கும். இது ஒருபுறம் இருக்க, கஜா புயலால் பாதிக்கப்பட்டு தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் பாதிக்கப்பட்ட மக்களை வந்து பார்வையிடவில்லை. இப்படியாகத் தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் விளைவித்து வருகிறார் பிரதமர். 

எனவே வரும் 27-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் பிரதமருக்கு ம.தி.மு.க சார்பில் எனது தலைமையில் கறுப்புக்கொடி காட்டுவேன். சி.ஐ.டி-களும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலுான் பறக்கவிடுவோம்’’ என அவர் தெரிவித்தார்.