வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றவாளி என அறிவித்து சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ள நிலையில் அவர் ராஜ்யசபா எம்.பி ஆவதில் சிக்கல் இல்லை என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

வைகோ மீது கருணாநிதி அரசு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசில் அங்கம் வகித்த காங்கிரஸ்- தி.மு.க.வுக்கு எதிராகவும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா 2009-ம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை அரங்கில் நடைபெற்றது. இதில் வைகோ பங்கேற்று ஆவேசமாக பேசினார்.

அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி தேசதுரோக வழக்கு தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி அறிவித்தார். அதன்படி அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையை வைகோ உடனடியாகக் கட்டிவிட்டார். ஆனாலு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் ராஜ்யசபா எம்.பி பதவியை ஏற்கமுடியுமா? என்கிற சந்தேகம் எழுந்தது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞர்கள், ‘’ இரண்டு ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலோ சிறை தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்படும். வைகோவுக்கு ஓராண்டு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அவர் ராஜ்ய சபா எம்.பியாக பதவி ஏற்பதில் எந்த சிக்கலும் இல்லை’’ எனக் கூறுகின்றனர்.