தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்திற்கு தேனி மாவட்ட மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான எதிர்ப்பைப் போலவே நியூட்ரினோ திட்டத்திற்கும் தமிழக அளவில் கடும் எதிர்ப்புகள் நிலவுகின்றன.

இந்நிலையில், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு நடைப்பயணத்தை மதுரையில் வைகோ தொடங்கினார். இந்த பயணத்தை ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்த நடைப்பயணம் தொடங்கும் முன்பாக ரவி என்ற மதிமுக தொண்டர் தீக்குளித்தார். உடனடியாக ரவியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, மேடையில் பேசிய வைகோ கண்ணீர் விட்டு அழுதார். 

ஆனாலும் கனத்த இதயத்துடன் பயணத்தைத் தொடங்கினார் வைகோ. பயணத்தின் போது மதுரையில் பேசிய வைகோ, நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளித்து, அந்த பாவத்தை பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சம்பாதித்து விடாதீர்கள். அந்த பாவத்தை செய்தால், அது உங்களை மட்டுமல்லாமல், உங்களது தலைமுறையையே பாதிக்கும்.

நியூட்ரினோ திட்டம் மிகவும் அபாயகரமானது. இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக ஆராய்ந்துள்ளேன். இந்த திட்டம் தமிழகத்திற்கு நல்லதல்ல. 5 மாவட்டங்களை அழிக்கவல்ல திட்டம் இது. நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால், முல்லை பெரியாறு அணை உள்ளிட்ட 36 அணைகள் உடையும் என வைகோ எச்சரித்தார்.