மாநிலங்களவை தேர்தலில் வைகோ வேட்பு மனு ஏற்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கடந்த 2009ம் ஆண்டு திமுக அரசு தொடர்ந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து சர்ச்சை எழுந்தது. ஆனால் வைகோ வேட்பு மனு தாக்கல் செய்தார். தேசத்துரோக சட்டப்பிரிவில் தண்டனை பெற்றதால் வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படாது என்று கூறப்பட்டது. 

வைகோவும் கூட வேட்பு மனு பரிசீலனையின் போது தான் தனது மனு ஏற்கப்படும் என்று தெரியும் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மாற்று ஏற்பாடாக திமுக சார்பில் என்.ஆர். இளங்கோ 4-வது வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இந்த பரபரப்பான சூழலில் நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. யாரும் எதிர்பாராதவகையில் வைகோவின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசன் ஏற்றுக் கொண்டார். 

இதற்கு முதல் காரணம் வைகோவின் வேட்பு மனு மீது யாரும் ஆட்சேபனை தெரிவிக்காதது தான் என்கிறார்கள். அதிமுக வேட்பாளர் தரப்பில் இருந்து ஆட்சேபனை தெரிவித்திருந்தால் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெற வேண்டும் என்கிற காரணத்தை கூறி வைகோ வேட்பு மனுவை நிறுத்தி வைக்க கூட வாய்ப்பு இருந்தது. ஆனால அதிமுக வேட்பாளர்கள் யாரும் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. 

இதேபோல் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனும் கூட முன்கூட்டியே வைகோ விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி விளக்கம் பெற்றார். தேர்தல் ஆணையமும் வைகோ தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை என்று என்ஓசி கொடுத்துவிட்டது. இதனை அடுத்தே நேற்று எவ்வித சர்ச்சைக்கும் இடம் அளிக்காமல் வைகோ வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில்அதிமுக பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதாக பாராட்டுகள் எழுந்துள்ளன.