வேலூர் மக்களவைத் தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே, திமுக தலைவர் ஸ்டாலின் மீது அதிமுக வழக்குப்பதிவு செய்துள்ளதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

 

வேலூர் மக்களவை தேர்தல் பரப்புரையில் போது கடந்த வியாழக்கிழமை ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இஸ்லாமியர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது தகவலறிந்து வந்த தேர்தல் அதிகாரிகள் தனியார் மண்டபத்துக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா அளித்த புகாரின் பேரில், தேர்தல் நடத்தை விதி மீறி கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த், தனியார் மண்டப உரிமையாளர் ஜகிரியா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு கண்டம் தெரிவித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலங்களவை எம்.பி. வைகோ, ’’முன்னாள் பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டங்களை பாஜக அரசு காலில் போட்டு மிதிக்கிறது. ஆம்பூரில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக மு.க.ஸ்டாலின் மீது அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டதை காட்டுகிறது’’ என அவர் தெரிவித்தார்.