விடுதலைப்புலிகள் இயக்கம் வீழ்ச்சியடைய, காங்கிரஸ் கட்சியின் பச்சை துரோகம் தான் காரணம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழத்தின் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் தலைமையில் பிரபாகரனின் 62வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல்காஸ்ட்ரோ மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, பிரபாகரனின் 62வது பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் எழுத்தாளர் புகழேந்தி தங்கராசு எழுதிய "நெருப்புப் பூச்சாண்டி மற்றும் விடுதலையின் முகவரி" என்ற புத்தகங்களை வெளியிட்டு வைகோ பேசினார். 

பிரபாகரனால் தமிழ் ஈழம் அமைத்திருந்தால், உலகில் அனைத்து துறையிலும் அந்நாடு வளர்ச்சி அடைந்திருக்கும் என கூறிய வைகோ, விடுதலை புலிகள் இயக்கம் வீழ்ச்சியடைய அப்போதைய ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் பச்சை துரோகமே காரணம் என குற்றஞ்சாட்டினார். 

திமுக தலைவர் கருணாநிதியை காட்டிலும், ஈழத்தமிழர்களுக்கு அதிக உதவிகள் புரிந்தவர் எம்ஜிஆர் என்றும் வைகோ குறிப்பிட்டார்.