முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் சிலையின்கீழ் பகவத்கீதை, பைபிள், குரான் வைக்கப்பட்டதற்கு கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் மணி மண்டபம் இரண்டு நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம், பேக்கரும்பு இடத்தில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது.

மணிமண்டபம் திறக்கப்பட்ட உடன், அப்துல்கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். அந்த சிலையின்கீழ், பகவத்கீதை புத்தகம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று பைபிள், குரான் நூல்களும் இன்று வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, தனியார் தொலைக்காட்சியில் பேசிய வைகோ, சமய சார்பில்லாத திருக்குறளை, அப்துல்கலாம் சிலை அருகே வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் திருக்குறளை உலகிற்கு எடுத்துச் சென்றவர் அப்துல் கலாம். கலாமின் சிலை அருகே சீக்கியம், புத்தம், சமணம் உள்ளிட்ட நூல்களை வைக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல், கலாம் சிலையின்கீழ் பகவத்கீதை வைக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சொந்த மதவெறி கொள்கையை பாஜக திணிக்க முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அப்துல்கலாம் சிலை அருகே குரான், பைபிள், பகவத்கீதை வைத்திருப்பது நல்லநோக்கம்தான், ஆனாலும் கலாம் சிலை அருகே திருக்குறளை வைத்திருக்க வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தினார்.