Asianet News TamilAsianet News Tamil

பாமகவின் வன்முறை அராஜகத்தை, முளையிலேயே கிள்ளி எறிய தவறிவிட்டது... வைகோ வேதனை!

இத்தகைய வன்முறை அராஜகத்தை, முளையிலேயே கிள்ளி எறிகின்ற வகையில், உறுதியான நடவடிக்கை எடுக்க, காவல்துறை தவறி விட்டது என வைகோ வேதனையாக கூறியுள்ளார்.

vAIKO sTATEMENTS AGAINST pmk
Author
Chennai, First Published Apr 21, 2019, 2:05 PM IST

இத்தகைய வன்முறை அராஜகத்தை, முளையிலேயே கிள்ளி எறிகின்ற வகையில், உறுதியான நடவடிக்கை எடுக்க, காவல்துறை தவறி விட்டது என வைகோ வேதனையாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் சகோதரர் தொல்.திருமா வளவன் அவர்கள் பானை சின்னத்தில் போட்டி இடுகிறார் என்பதால், அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்தில், நடு வீதியில் பானைகளை உடைத்து, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணியினர் நடத்தியுள்ள வன்முறை, கண்டனத்திற்கு உரியதாகும்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களையும் கொளுத்தி உள்ளனர். ஒரு தலித் சகோதரர், தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

நாடு முழுவதும் திட்டமிட்டு மத மோதல்களை உருவாக்கி வருகின்ற பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியும், வன்முறையில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கின்றது.

இத்தகைய வன்முறை அராஜகத்தை, முளையிலேயே கிள்ளி எறிகின்ற வகையில், உறுதியான நடவடிக்கை எடுக்க, காவல்துறை தவறி விட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர், காஞ்சிபுரம் திருப்போரூரில் பேசுகையில், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற வேண்டும் என்று தன் கட்சிக்காரர்களிடம் சூசகமாகச் சொன்னது குறித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. அதன் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது. அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கைதான்.

அவர் போட்டி இடுகின்ற தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில், நத்தமேடு வாக்குச் சாவடியைக் கைப்பற்றி, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து, ஜனநாயகத்தை அழித்த கொடுமை, இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் வெளிவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலும், இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அமைதிக்குப் பங்கம் நேர்ந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியும், அவர்களால் ஆட்டுவிக்கப்படுகின்ற தமிழக ஆளுங் கட்சியும் இணைந்து, சட்ட ஒழுங்கைக் கேள்விக்குறி ஆக்குகின்ற நடவடிக்கைகள் தொடர்வது, பொது அமைதிக்கு ஆபத்து உருவாகி இருக்கின்றது.

சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிப்போர் மீது, காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்வதுடன், அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு உரிய பாதுகாப்புத் தர வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios