ஏழு பேர் விடுதலையில் ஆளுநரும் மாநில அரசும் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறது. ஆளுநர் போட்டி சர்கார் நடத்திகொண்டு இருக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். “ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னை ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் மாநாடு நடக்க உள்ளது. அந்த மாநாட்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி, மலேசிய அமைச்சர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலுக்கு லட்சக்கக்கானோர் பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்திருந்தும்  மாநில அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதன் காரணமாக இதுவரை அத்திவரதரை காண சென்ற 9 பேர் இறந்து உள்ளனர். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிதான் இறந்து போயிருக்கிறார்கள். அத்தி வரதரைத் தரிசிக்க தமிழக அரசு போதிய வசதிகள் எதையும் பக்தர்களுக்கு செய்து தரவில்லை.
ஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநரும் மாநில அரசும் நாடகம்  நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு போட்டி சர்காரையே நடத்திகொண்டு இருக்கிறார். தமிழக அமைச்சரவையும் ஆளுநரும் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து வருகிறார்கள். வேலூர்  நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.'' என வைகோ தெரிவித்தார்.