மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள்ளாகவே நாடாளுமன்றத்தையே அதிர வைத்து வருகிறார் வைகோ.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி.யாக வைகோ பதவி ஏற்றுக் கொண்டார். அன்றைய தினமே துணைக்கேள்வி கேட்டு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பாராட்டுகளை பெற்றார். அதோடு வைகோ கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடியே கை தட்டி வரவேற்பு தெரிவித்தார். இதனை வைகோவே கூறி புலகாங்கிதம் அடைந்திருந்தார். 

தொடர்ந்து காவிரி மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் வைகோ பேசியது கர்ஜனை போல் இருந்தது. மத்திய அரசுக்கு பகிரங்கமாக வைகோ எச்சரிக்கை விடுக்க மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அதிர்ந்தே போனார். பிறகு சபையில் வேண்டுகோள் தான் விடுக்க வேண்டும், எச்சரிக்கவோ, மிரட்டவோ கூடாது என்று கூறினார். 

தொடர்ந்து என்ஐஏ சட்டத்திற்கு எதிராகவும் வைகோ பேசிய பேச்சுகள் நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளானது. அதோடு மட்டும் அல்லாமல் முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராகவும் வைகோ தனது கருத்துகளை ஆணித்தனமாக எடுத்து வத்தார். தொடர்ந்து நியுட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நேற்று பேசிய பேச்சுகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நியுட்ரினோ என்றால் என்ன நியுட்ரான் என்றால் என்ன? என வைகோ பட்டியலிட மொத்த மாநிலங்களவையும் அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. மேலும் நியுட்ரினோ திட்டத்தினால் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் உள்ளது, நியுட்ரினோ மையம் அமைக்கப்பட்டால் எதிரி நாடுகளின் இலக்காக தமிழகம் மாறும் என்று வைகோ புதிய பாய்ன்ட் பிடிக்க அவருக்கு பதில் சொல்லத்தான அவையில் யாரும் இல்லை. 

இப்படி வைகோ ஒரே வாரத்திற்குள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கதாநாயகன் ஆகிவிட அடுத்த நாள் பதவி ஏற்ற அன்புமணி என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் அன்புமணி தற்போது வரை ஒரு துணைக் கேள்வி கூடகேட்கவில்லை என்கிறார்கள்.