காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மசோதாவை தாக்கல் செய்த முதல்வர், வேளாண்மைன்மையை பாதுகாக்க சில நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். டெல்டா பகுதிகளில் துத்த நாகம், செம்பு, இரும்பு உருக்காலைகள் அமைக்க தடைவிதிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். மேலும் புதியதாக ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகியவை டெல்டா பகுதிகளில் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு தீர்மானங்களை மத்திய அரசு பொருட்படுத்தாது என்றும் அவை அனைத்தும் குப்பைத்தொட்டிக்கு தான் போகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருக்கிறார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்து, அமைச்சரவை கூட்டத்திலும் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாது. டெல்டா மாவட்டங்களில் அதை கட்டாயம் நிறைவேற்றும் என கூறினார்.

வரலாற்றில் இடம் பிடித்த எடப்பாடி..! 'காவிரி வேளாண் மண்டல' சட்டமசோதா தாக்கல் செய்து அதிரடி..!

ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானங்கள் மத்திய அரசை பொருட்படுத்தாது எனவும், அவை அனைத்தும் குப்பைத்தொட்டிக்கு தான் செல்லும் என கடுமையாக விமர்சித்தார். எனவே டெல்டா பகுதி விவசாயிகள் விழித்துக்கொள்ள வேண்டும் என கூறிய வைகோ திட்டத்தை கைவிடக்கோரி திரண்டு போராட்டம் நடத்த வேண்டும் என கூறியிருக்கிறார். மேலும் மத்திய அரசை கண்டிக்க தவறினால் தஞ்சை டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் எனவும் வைகோ தெரிவித்தார்.