பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்ற எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சும், திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல, தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தமிழகம் முழுவதும் எழுந்த கடுமையான எதிர்ப்புகளை அடுத்து, அந்த பதிவை நீக்கிய எச்.ராஜா, அதற்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். மேலும் அதை தான் பதிவிடவில்லை எனவும் தனது முகநூல் பக்கத்தை நிர்வகிப்பவர்தான் பதிவிட்டார் எனவும் விளக்கமளித்தார். 

இந்த விளக்கத்தை கூறிய மறுநாளே மீண்டும், பெரியாருக்கு எதிராக பேசினார். தமிழை ஒழிக்கத்தான் திராவிடத்தை பெரியார் பயன்படுத்தினார் என எச்.ராஜா பேசினார். எச்.ராஜாவின் இந்த பேச்சு, அவர் வருத்தம் தெரிவித்ததும் அவர் அளித்த விளக்கமும் உண்மையானதுதானா? அல்லது பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பெயரளவிலான விளக்கமா? என்ற சந்தேகத்தை எழுப்பியது.

பெரியாரின் சிலையை உடைப்பவர்களின் கைகள் வெட்டி வீசப்படும் என வைகோ கடுமையாக எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வைகோவிடம் பெரியார் சிலை தொடர்பான சர்ச்சை குறித்தும் பாஜக தலைமையின் கருத்து குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, சிலை உடைப்புகள் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் ஆதரவு இல்லாமல் எச்.ராஜா பேசமுடியாது. அவர்கள்தான் எச்.ராஜாவை ஊக்குவிக்கிறார்கள்.

இப்போது பெரியாரை அவதூறாக பேசி முன்னோட்டம் பார்க்கிறார்கள். அதில் வெற்றி கண்டால், பாஜகவின் அடுத்த இலக்கு அண்ணா. ஆனால் பெரியாரை பற்றி பேசியதற்கு தமிழர்கள் கொந்தளித்துவிட்டார்கள் என வைகோ தெரிவித்தார்.