கருணாநிதியை அடக்கம் செய்ய அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்குமாறு முதல்வர் பழனிசாமிக்கு வைகோ ஆவேசமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தபோதே, இன்று மாலை முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து, கருணாநிதியை அடக்கம் செய்ய மெரீனாவில் அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்குமாறு ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஸ்டாலினுடன் அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், ஐ.பெரியசாமி ஆகியோரும் சென்றிருந்தனர்.

ஆனால், மெரீனாவில் நல்லடக்கம் செய்வதற்கு எதிராக நீதிமன்றங்களில் நிலுவைகளில் உள்ள வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்கள் ஆகியவற்றை காரணம் காட்டி மெரீனாவில் அடக்கம் செய்ய அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. காந்தி மணிமண்டபத்தில் காமராஜர் நினைவிடம் அருகே இடம் ஒதுக்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இது, திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான கருணாநிதியை மெரீனாவில் அடக்கம் செய்ய தார்மீக அடிப்படையில்  இடம் ஒதுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமியிடம் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

இதற்கிடையே, காவேரி மருத்துவமனையில் கூடியிருந்த தொண்டர்கள், கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்கக்கோரி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதி பதற்றமாக உள்ளது. இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முதல்வரே.. கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய அனுமதி கொடுங்கள். கோடிக்கணக்கான மக்களின் சார்பில் உங்களை கைகூப்பி மன்றாடி கேட்கிறேன். அண்ணாவின் பக்கத்தில் கருணாநிதியை தூங்க விடுங்கள் என வேண்டுகோள் விடுத்த வைகோ, மத்திய அரசு உங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறதா? என முதல்வரை நோக்கி கேள்வியெழுப்பினார்.