கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கஜா புயல் நிவாரணப் பணிகளில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை பாராட்டியிருந்தார். அமைச்சர்கள் இருவரும் மிகச்சிறப்பாக புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் வைகோ புகழ்ந்து தள்ளியிருந்தார். புயல் நிவாரணப் பணிகளில் சரிவர நடைபெறவில்லை என்று தி.மு.க கூறி வருகிறது.

ஆனால் தி.மு.க கூட்டணியில் இருப்பதாக கூறிக் கொள்ளும் வைகோ புயல்  நிவாரணப் பணிகளை பாராட்டியது ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தாங்கள் தி.மு.க கூட்டணியில் இருப்பதாகவும், 100 சதவீதம் தி.மு.க கூட்டணியில் தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி என்றும் விளக்கம் கொடுத்தார்.

ஆனால் மறுநாள் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்த தி.மு.க பொருளாளர் துரைமுருகனிடம் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.கவும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இல்லை என்று துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த பேட்டியால் ம.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

முதல் நாள் வைகோ தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இருப்பதாக கூறிய நிலையில் மறுநாள் ஸ்டாலினின் வலது கரமும், அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் கூட்டணியில் வைகோ இல்லை என்று கூறியது ம.தி.மு.கவுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தி.மு.க தரப்பில் தனக்கு உள்ள தொடர்புகள் மூலம் துரைமுருகன் மீதான அதிருப்தியை ஸ்டாலினிடம் வைகோ கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஸ்டாலின் இந்த விஷயத்தில் மவுனமாக இருந்த காரணத்தினால் தான் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் வெளிப்படையாகவே சில விஷயங்களை வைகோ பேசியுள்ளார். தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இல்லை என்று துரைமுருகன் கூறியது தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளதாக வைகோ தெரிவித்தார். மேலும் சுயமரியாதையும் கேள்விக்குறியாகியுள்ளது போல் தோன்றுவதாகவும் வைகோ கூறினார்.

ஆனால் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இருக்கிறதா என்பதை ஸ்டாலின் இனி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார். வைகோ பேட்டி அளித்து அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியான பிறகும் கூட இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க தரப்பு மிகவும் மவுனமாக உள்ளது. ஸ்டாலின் இரண்டு மூன்று அறிக்கைகள் வெளியிட்ட போதும் கூட ம.தி.மு.க தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதனால் கூட்டணி விவகாரத்தில் ஸ்டாலின் – வைகோ இடையே பனிப்போர் நிலவுவதாக கூறப்படுகிறது.