Asianet News TamilAsianet News Tamil

'வேளாண் மண்டல அறிவிப்பெல்லாம் வெற்று ஆரவாரம் தானா'..? எடப்பாடியை விடாது விமர்சிக்கும் வைகோ..!

காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களும், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய ரசாயன ஆலைகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாகத் தடை செய்தால் மட்டுமே வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று அறிவிப்பதும், சட்டம் இயற்றுவதும், செயல் வடிவம் பெறும். இல்லையேல், வெற்று ஆரவார அறிவிப்பாகப் போய்விடும்.

vaiko questions tamilnadu government on hydrocarbon project
Author
Trichy, First Published Feb 21, 2020, 3:06 PM IST

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் அறிவிக்கப்பற்றிக்கும் நிலையில் ஹைட்ரோகார்பன் குறித்து எழும் கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கமளிக்குமா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வட்டாரங்கள் மட்டுமே வேளாண் மண்டலம் என்ற வரையறையின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

vaiko questions tamilnadu government on hydrocarbon project

காவிரி டெல்டா பகுதிகளான திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதும் இந்த சட்ட மசோதாவில் இணைக்கப்படாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், வேளாண்மை சாராத தொழில்கள், குறிப்பாக துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு ஆலை, செம்பு உருக்காலை, அலுமினியம் உருக்காலை, எண்ணெய் மற்றும் நிலக்கரிப் படுகை, மீத்தேன் ஆலைகள், பாறைப் படிம எரிவாயு, ஹைட்ரோகார்பன் வாயு எடுத்தல், வாயுக்களின் ஆய்வுகள், துளைத்தெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. 2018 அக்டோபர் 1 ஆம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு வேதாந்தா குழுமம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து தமிழக அரசு திட்டவட்டமாக, தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்காதது ஏன்? அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாமல், வெறுமனே வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று சட்டம் இயற்றுவதால் ஆகப்போவது என்ன?

vaiko questions tamilnadu government on hydrocarbon project

வேளாண் சாராத தொழில்கள் தொடங்க முடியாது என்றுள்ள பட்டியலில் பெட்ரோலியம், பெட்ரோலிய ரசாயனம், சுத்திகரிப்புத் தொழில்கள் குறிப்பிடப்படவில்லையே. அது ஏன்? கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அவற்றில் பெட்ரோலிய ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருகள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017ஆம் ஆண்டு ஜூலை 19 இல் தமிழக அரசு பிறப்பித்த குறிப்பாணை எண்.29 ரத்து செய்யப்படும் என்று முதல்வர் அறிவிக்காதது ஏன்? கடந்த ஆண்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்றிருந்தபோது கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலத்தில் முதலீடு செய்வதற்கு ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வந்தாரே, அதை ரத்து செய்வோம் என்று அறிவிக்கத் தயாரா?

vaiko questions tamilnadu government on hydrocarbon project

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் புரந்தண்ட் சட்டர்ஜி தமிழக முதல்வரைச் சந்தித்துவிட்டு, கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலத்தில் 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப் போகிறேம் என்று அறிவித்துவிட்டுச் சென்றாரே? அதனை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி செய்தது மட்டுமல்ல, பெட்ரோலிய ரசாயன ஆலைகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கூறி உள்ளாரே? அப்படியானால், கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் சேர்க்கப்படவில்லையா? விஸ்வரூபமெடுக்கும் இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்குமா? என்று காவிரிப் படுகை மாவட்ட மக்கள் கேட்கிறார்கள். காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களும், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய ரசாயன ஆலைகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாகத் தடை செய்தால் மட்டுமே வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று அறிவிப்பதும், சட்டம் இயற்றுவதும், செயல் வடிவம் பெறும். இல்லையேல், வெற்று ஆரவார அறிவிப்பாகப் போய்விடும்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பாஜக பிரமுகர் கடையில் சரமாரி முட்டை வீச்சு..! அறந்தாங்கியில் பரபரப்பு..!

Follow Us:
Download App:
  • android
  • ios