தமிழக அரசு மீது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது என மதிமுக பொது செயலாளர் வைகோ கூறினார்.

போலீசாரின் தடையை மீறி, மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர். இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து, 4 பேர் மீது. கடந்த மே 28ம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த கைதை எதிர்த்து திருமுருகன் காந்தி உட்பட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதை விசாரித்த நீதிபதிகள், வரும் 30ம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் தர உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ, சிறையில் உள்ள திருமுருகன் காந்தியை இன்று புழல் சிறைச்சாலையில் சந்தித்து பேசினார். பின்னர் வைகோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தமிழக அரசு சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறது. போராட்டம் நடத்துபவர்களிடம் அராஜக போக்கை கடைபிடிக்கிறது. அகிம்சை வழியில் போராடுபவர்களை கைது செய்வது, எந்த விதத்தில் நியாயம்.

தமிழக அரசு அடக்குமுறை சட்டத்தை வைத்து கருத்து சுதந்திரத்தை பறிக்க முயற்சிக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடக்கிறது. அஞ்சலி செலுத்த சென்றவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தது அக்கிரமம். குண்டர் சட்டம் அதைவிட அக்கிரமம்.

கருத்துக்களை ஜனநாயக ரீதியில் மக்களிடம் கொண்டு செல்பவர்களை கைது செய்வது, கொடிய அடக்கு முறை. 30ம்தேதி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு வருகிறது. அப்போது, நல்லதே நடக்கும் என நம்புகிறோம்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்த வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது பாசிச நடவடிக்கை ஆகும். அரசு மீது, மக்களுக்கும், இளைஞர்களுக்கும் வெறுப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.