மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக அப்போதைய திமுக அரசு தொடர்ந்த 2 அவதூறு வழக்குகளில் ஒரு வழக்கில் அவரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்றம் மற்றொரு வழக்கில் விடுவிக்க மறுத்து விட்டது.

மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக 2006-ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ கடிதம் எழுதினார். 2009-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கருணாநிதி தான் காரணம் என பொதுக்கூட்டம் ஒன்றில் வைகோ பேசினார்.

இவைதொடர்பான தமிழக அரசின் அவதூறு வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கக்கோரிய வைகோவின் மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, பாரதிராஜா அலுவலகம் தாக்குதல் குறித்து பேசிய வழக்கில் விடுவித்தும், மதிமுகவை உடைக்க கருணாநிதி முயற்சித்ததாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதிய வழக்கில் விடுவிக்க மறுத்தும் உத்தரவிட்டார்.

ஆக, மொத்தத்தில் கருணாநிதி தொடர்பான அவதூறு வழக்கில் ஒன்றில் விடுவிக்கப்பட்டும் மற்றொன்றில் மறுக்கப்பட்டும் உள்ளார் வைகோ. அவர் இப்போது திமுக கூட்டணியில் இருந்து வருகிறார். திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் இந்த அவதூறு வழக்கு வைகோவை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.