கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கால் பத்திரிக்கை துறை வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் நிலுவையில் உள்ள விளம்பர பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் பத்திரிகைகளுக்கான விளம்பரம் கட்டணத்தை 100 சதவீதம் உடனே உயர்த்த வேண்டுமெனவும் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது: இதற்கு முன் எப்போதும் ஏற்படாத இதுபோன்ற சூழ்நிலையில் செய்தித்தாள் பத்திரிகை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். நமது மிகப்பெரிய நாட்டின் ஜனநாயகத்தின் நான்காம் தூணாக பத்திரிகைகள் விளங்குகின்றன என்பதை நாமெல்லாம் உறுதியாக நம்புகிறோம். ஆனால் தற்போது எழுந்துள்ள கடுமையான சூழ்நிலை, அவர்களின் பிழைப்பு மற்றும் தொடர்ந்து நிலைப்பது தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே பல பத்திரிகை நிறுவனங்கள், பத்திரிகைகளின் பக்கங்களைக் குறைத்தும், சில பதிப்புகளை நிறுத்தியும், சமுதாயத்தின் மேல் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் காரணமாக தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாகப்பார்க்கிறோம். பத்திரிகை தொழில், 30 லட்சத்துக்கும் மேலானோருக்கு வேலை அளிப்பதோடு, அவர்கள்தான் நம் சமுதாயத்தை அறிவுசார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் இருக்கிறார்கள். ஆனால் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பேரிடரால், விளம்பரம் மூலம் வரும் வருவாய் ஏறக்குறைய மொத்தமாக நின்று போய்விட்டது. பத்திரிகைகளை நடத்துவதற்கு விளம்பர வருவாய்தான் மிக முக்கியமான காரணியாக உள்ளது. புதிதாக இயல்பு நிலைக்கு திரும்பி, வழக்கமான நடவடிக்கைகள் தொடங்கும் வரை, தற்போதுள்ள நிலைதான் நீண்ட காலம் தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளவாடப் பணிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பத்திரிகைகளின் விற்பனை பெரிய அளவிலோ அல்லது நடுத்தர அளவிலோ குறைந்திருக்கிறது. இதுதொடர்பாக நிவாரணம் கேட்டு சில கோரிக்கைகளை பத்திரிகை நிறுவனங்களின் அமைப்பு ஏற்கனவே அளித்துள்ளன. அவர்களுக்கு ஆதரவாக அந்த கோரிக்கைகளை எங்கள் சார்பிலும் உங்களிடம் அளிக்கிறோம். அதன்படி, பத்திரிகைகளை அச்சிடும் செய்தித்தாளுக்கான சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள விளம்பர பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். பத்திரிகைகளுக்கான விளம்பரம் கட்டணத்தை 100 சதவீதம் உடனே உயர்த்த வேண்டும்.

அரசு அறிவிப்புகளை வெளியிடுவதில் அச்சு ஊடகங்களின் உபயோகத்தை அதிகரிக்க வேண்டும். அடுத்த 2 நிதியாண்டுகளுக்கு வரியில்லா விடுப்பு காலகட்டமாக அறிவிக்க வேண்டும். பத்திரிகை நிறுவனங்களுக்கு நிவாரணம் கிடைக்க நீங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு வைகோ தனது கடிதத்தில் கூறியுள்ளார்.