Vaiko condemns modi for action against tamilnadu

தனக்கு பிடித்திருந்தால் புகழ் மழையை பொழிந்து அவர்களை அன்பில் திக்குமுக்காட செய்வதும்! எதிரி என்றால் வக்கனையான விமர்சன வார்த்தைகளை போட்டு பொளந்து கட்டுவதும் வைகோவுக்கு கை வந்த கலை. 
கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பி.ஜே.பி.யின் கூட்டணியில் இருந்த நேரத்தில் மோடியின் பெருமைகளை தமிழகத்தின் உள் கிராமமான கலிங்கப்பட்டியில் துவங்கி சென்னையின் ஓங்கியுயர்ந்த அப்பார்ட்மெண்டுகள் வரை கொண்டு போய் சேர்த்தவர் வைகோ. ஆனால் அந்த தேர்தலில் ம.தி.மு.க உள்ளிட்ட அத்தனை கூட்டணி கட்சியினருக்கும் கடும் அடி. 

இதன் பிறகு பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியேறிய வைகோ, இலங்கை விவகாரம் மற்றும் இந்தியாவுக்கு ராஜபக்‌ஷே வருகை தந்தது ஆகியவற்றை மையமாக வைத்து மோடியை போட்டுப் பொளந்து கட்டினார் தமிழகமெங்கும். இதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி.க்கு எதிரான நிலையெடுத்தார். 

அதன் பிறகு நியூட்ரினோ, கதிராமங்கலம், ஜல்லிக்கட்டு, நீட் விவகாரம் என்று தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு நின்ற விவகாரங்களில் எல்லாம் தமிழகத்தின் வீதி வீதியாக சென்று ஓங்கிய குரலில் மோடியை ஆங்காரமும் ஓங்காரமுமாக திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார் வைகோ. 
ச்சும்மாவே சாமியாடியவருக்கு சலங்கையும் கட்டி விட்டாற் போல், காவிரி மேலாண்மை வாரிய விவகாரமும் இணைந்து கொள்ள இப்போது மோடி தலைமையிலான மைய்ய அரசை மய்யமாக வைத்து மெர்சல் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார் வைகோ. 

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் காவிரி பாதுகாப்புஇயக்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய வைகோ...”செழுமை வாய்ந்த காவிரியை பொட்டல் காடாக மாற்ற வேண்டும் என்பதே மோடியின் எண்ணம். அம்பானிகளும், அதானிகளும் தமிழ்நாட்டை வேட்டையாட வேண்டும், தரிசு நிலங்களாக்கி தமிழகத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க வேண்டும் என நினைக்கின்றனர். இதற்கு மோடியின் கொள்கைகளும், திட்டங்களும் உறுதுணை புரிகின்றன.

நீதிபதி தீபக் மிஸ்ரா தன் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது, ஒரு திட்டத்தை வகுத்துக் கொடு என்கிறார். அத்திட்டத்தை எப்படி வேண்டுமானாலும் நாடாளுமன்றம் மாற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இது மோடியின் நயவஞ்சக திட்டம். இது உலக அளவில் மிகப்பெரிய அநீதி. உலகமே ஒத்துக் கொள்ளாத அநீதியை தமிழகத்துக்கு செய்து சாதனை படைக்க துடிக்கிறார் மோடி. கர்நாடகம் புதிய அணைகள் கட்டிவிட்டால் மேட்டூருக்கு சொட்டுத் தண்ணீர் கூட வராது. எல்லாவற்றுக்கும் மோடியின் வஞ்சக செயலே காரணம்.” என்று வார்த்தைக்கு வார்த்தை வகுந்திருக்கிறார் வைகோ.