திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை நியாயப்படுத்தும் விதமாக ஆளுநர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் அங்கு இன்னும் பாஜக ஆட்சியே அமைக்காத நிலையில், தெற்கு திரிபுராவின் பிலோனியா பகுதியில் இருந்த லெனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த லெனின் சிலையை பாஜகவினர் அகற்றியுள்ளனர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல் நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமியின் சிலை உடைக்கப்படும் என்று பதிவிட்டிருந்தார்.

எச் ராஜாவின் சர்ச்சை கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதையடுத்து அந்த பதிவை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து ராஜா நீக்கினார்.

எச்.ராஜாவின் கருத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த வைகோ, பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டால், காரணமானவர்களின் கை, கால்கள் துண்டாக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.