Asianet News TamilAsianet News Tamil

'இந்து ராஷ்டிரா' கனவை நனவாக்க துடிக்கிறார்கள்..! பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ..!

மத அடிப்படைவாதத்தைப் பெரும்பான்மை வாதமாக, தேசியவாதமாகக் கட்டமைத்து வரும் பா.ஜ.க. அரசும், அதற்குத் துணை போகின்ற கட்சிகளையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. மகாத்மா காந்தி கட்டமைத்த மதச்சார்பற்ற இந்தியாவைச் சீரழிக்க முனைந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் கிளர்ந்து எழவேண்டிய நேரம் வந்துவிட்டது.

vaiko condemns bjp government
Author
Chennai, First Published Dec 21, 2019, 12:33 PM IST

வரும் 23 ம் தேதி திமுக சார்பாக குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக நடக்கும் பேரணியில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அழைப்பு விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாரதிய ஜனதா கட்சி அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, ‘இந்து ராஷ்டிரா கனவை’ நனவாக்கிட நாட்டின் பன்முகத்தன்மையை சீரழித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.காஷ்மீரத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமை ரத்து, முத்தலாக் தடைச் சட்டம், பொது சிவில் சட்டம் என்று அடுத்தடுத்து தங்கள் நீண்ட கால செயல்திட்டத்தை நிறைவேற்ற முனைந்துள்ள பா.ஜ.க. அரசு தற்போது குடியுரிமை திருத்தத் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. டிசம்பர் 11 அன்று மாநிலங்கள் அவை விவாதத்தின்போது, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் இந்தச் சட்டத்தை வங்கக் கடலில் தூக்கி வீசி எறிய வேண்டும் என்று கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன்.

vaiko condemns bjp government

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறிஸ்தவர், பார்சி, ஜெயின், சீக்கியர் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் 2014 டிசம்பர் 31 க்குள் இந்தியாவில் குடியேறி இருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று குடியுரிமைத் திருத்தச் சட்டம் -2019 (ஊவைணைநளோiயீ ஹஅநனேஅநவே ஹஉவ-2019 -ஊஹஹ) கூறுகிறது. ஆனால் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கும், இலங்கையிலிருந்து ஏதிலிகளாக தமிழகத்திற்கு வந்து 35 ஆண்டுகளாக வாழுகின்ற ஈழத் தமிழர்களுக்கும், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முஸ்லிம்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்று வரையறுக்கப்பட்டு இருக்கிறது.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 14, 15, 21, 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு எதிராக குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019 கொண்டுவரப்பட்டு இருப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

vaiko condemns bjp government

குறிப்பாக இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 14 - மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அடிப்படையில் எவரையும் அரசு பாகுபடுத்தக்கூடாது என்று தெளிவுபட கூறுகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி அரசு, முஸ்லிம்களை மத அடிப்படையிலும், ஈழத்தமிழர்களை இன அடிப்படையிலும் பிரிவினை செய்வது அரசியல் சட்டத்தையே காலில் போட்டு மிதிக்கும் கொடுஞ்செயல் கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும். அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமத்துவ உரிமையை மதத்தின் பெயரால் தட்டிப் பறிக்கும் அதிகாரம் பா.ஜ.க. அரசுக்குக் கிடையாது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையோ, நாடாளுமன்ற ஜனநாயகத்தையோ ஒரு பொருட்டாகக் கருதாமல் கிள்ளுக் கீரையாக கருதுகின்ற மதவாத சனாதன கும்பலின் கைகளில் அல்லவா இந்தியாவின் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டு இருக்கிறது?

vaiko condemns bjp government

ஏற்கனவே அசாமில் கொண்டுவரப்பட்ட குடியுரிமைப் பதிவேடு (சூயவiடியேட சுநபளைவநச டிக ஊவைணைநn -சூசுஊ) 20 இலட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்று வரையறுத்ததை ஏற்காமல் போராட்டம் நடந்து வருகிறது. தற்போது வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம், மேகலாயா, மிசோரம் மற்றும் திரிபுரா என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரம் ஆகி வருகிறது. இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் எரிமலையென வெடித்து இருக்கிறது. காவல்துறை அடக்குமுறையை ஏவி இந்நாட்டு இளைஞர்களின் எழுச்சியை ஒடுக்கிவிடலாம் என்று இந்துத்துவ மதவாத சனாதன அரசு மனப்பால் குடிக்கிறது. இந்தியா இந்துக்களின் நாடு, இங்கு இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அந்நியர்கள் என்ற ஆர்.எஸ்.எஸ். மதவாத கருத்தியலை சட்டபூர்வமாக்கி, இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற முனைந்திருக்கிறது பா.ஜ.க. அரசு. மத அடிப்படைவாதத்தைப் பெரும்பான்மை வாதமாக, தேசியவாதமாகக் கட்டமைத்து வரும் பா.ஜ.க. அரசும், அதற்குத் துணை போகின்ற கட்சிகளையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. மகாத்மா காந்தி கட்டமைத்த மதச்சார்பற்ற இந்தியாவைச் சீரழிக்க முனைந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் கிளர்ந்து எழவேண்டிய நேரம் வந்துவிட்டது.

vaiko condemns bjp government

பாசிச பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஆருயிர்ச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் டிசம்பர் 23 காலை 9 மணி அளவில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகிலிருந்து ராஜரத்தினம் திடல் நோக்கி நடைபெறும் மாபெரும் பேரணியில் கழகக் கண்மணிகளும், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், கலைத் துறையினர் என அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று ஜனநாயகம் காக்க, மதச்சார்பற்ற தன்மையை நிலைநாட்ட கரம் கோர்த்து எழுவோம் வாரீர்! வாரீர்!

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios