தன் மனம்போன போக்கில் செயல்பட்டு வரும் கவர்னர் ரவியை, தமிழ்நாடு கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் விளக்கிச் சொல்லி அவர்களது கையெழுத்துக்களைப் பெறும் இயக்கத்தினை மதிமுக தொடங்க இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு- ஆளுநர் ரவி மோதல்

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசின் தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளை ஆளுநர் ஈடுபட்டுவருவதாக திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகிறது. தமிழக அரசின் ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாகவும் புகார் கூறப்பட்டது. இந்தநிலையில் தமிழக அரசின் சார்பாக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்படுவதாக கூறி ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

ஆனால் இதனை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், மதிமுக 29 ஆவது பொதுக்குழுவில் தமிழ்நாடு கவர்னர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்குமாறு குடியரசுத் தலைவரிடம் கேட்டுக்கொள்ளும் கையெழுத்து இயக்கத்தினை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

முட்டுக்கட்டை போடும் ஆளுநர்

மேலும் மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், இந்துத்துவா கோட்பாட்டைத் திணிக்கும் வகையிலும் ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிட்டு தடுக்கும் வகையிலும் தன் மனம்போன போக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள வைகோ, எனவே ஆளுநர் ரவியை, தமிழ்நாடு கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் விளக்கிச் சொல்லி அவர்களது கையெழுத்துக்களைப் பெறும் இயக்கத்தினை

கையெழுத்து இயக்கம் நடத்தும் வைகோ

மறுமலர்ச்சி தி.மு.கழகம் 20.06.2023 முதல் 20.07.2023 வரை நடத்திட உள்ளது என கூறியுள்ளார். ஜனநாயக நெறிமுறைகளுக்கும், அரசியல் அமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும் எதிராகச் செயல்படும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கவர்னர் பொறுப்பிலிருந்து அகற்றுவற்காக மறுமலர்ச்சி தி.மு.கழகம் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்குமாறு வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

கொங்கு மண்டலத்தை செந்தில்பாலாஜிக்கு அப்பன், முப்பாட்டன் எழுதி வைத்துவிட்டு போய்விட்டார்களா?- சி.வி.சண்முகம்