கொங்கு மண்டலத்தை செந்தில்பாலாஜிக்கு அப்பன், முப்பாட்டன் எழுதி வைத்துவிட்டு போய்விட்டார்களா?- சி.வி.சண்முகம்
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள சி.வி.சண்முகம், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மீது பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் 1996 - 2001 ல் ஆலடி அருணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோது கலைஞர் அமைச்சரவையில் இருந்து நீக்கியதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஆளுநரிடம் அதிமுக புகார்
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், அப்போது பேசிய சி.வி.சண்முகம், "நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேரமாகியும் அமைச்சராக தொடர்வது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரண்பாடானது. ஒரு வேலைக்கு பத்து பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு பல இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை பறித்த அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்காமல் காத்துக் கொண்டுள்ளார். இது முற்றிலும் தவறான செயல் என விமர்சித்தார்.
செந்தில் பாலாஜியை ஓடோடி சென்று பார்ப்பது ஏன்.?
குற்றவாளியாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள அமைச்சருக்கு முதலமைச்சர் ஏன் இந்த அளவிற்கு இறங்கி வந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி கைது செய்யப்பட்டபோது கூட வருந்தியோ, ஒரு முறை கூட சென்று பார்த்ததாக எனக்கு தெரியவில்லை. மருத்துவமனையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை இரவு 03:30 மணிக்கு அமைச்சர் உதயநிதி வந்து பார்க்கிறார். முதலமைச்சர் வந்து பார்க்கிறார். சபரீசன் ஏன் வந்து பார்க்க வேண்டும்? தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் டம்மி அமைச்சர்களாக உள்ளனர்.
கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் தான் அமைச்சர்களின் வேலை. கலெக்ஷன் அனைத்தும் செந்தில் பாலாஜி தான்.சென்னையில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 2000 கோடி வருமானம் வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 20,000 கோடிக்கு மோசடி செய்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலத்தில் ரூ. 40000 கோடி மோசடி செய்து உள்ளார். முதலமைச்சர் கூட இந்த அளவிற்கு வருமானம் பார்க்கவில்லை.
செந்தில் பாலாஜி ஒரு நோட்டு அடிக்கும் மிசின்
கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அமைச்சரை தார்மீகமாக நீக்கி இருக்க வேண்டும். ஏன் முதலமைச்சர் நீக்கவில்லை? முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மீது பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு பட்டதால் 1996 - 2001 ல் ஆலடி அருணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோது கலைஞர் அமைச்சரவையில் இருந்து நீக்கினார். அதிமுக ஆட்சியில் கூட அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூட நீக்கப்பட்டார். செந்தில் பாலாஜி ஒரு நோட்டு அடிக்கும் மிசின். வாக்கிங் சென்று வந்தவர் கைது என்று வந்தவுடன் நெஞ்சு வலி என நாடகம் ஆடுகிறார். இப்படி நாடகம் நடத்திக்கொண்டு மக்கள் மீது திசை திருப்ப பார்க்கிறார்கள்.
செந்தில்பாலாஜியின் அப்பன், முப்பாட்டன் எழுதிவைத்துவிட்டார்களா.?
இரண்டு ஆண்டுகளில் செந்தில் பாலாஜி அடித்த கொள்ளையை விசாரித்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப்பெரிய ஒரு ஊழல் வெளிப்படும். அப்படி நடைபெற்றால் முதலமைச்சரின் குடும்பம் சிக்கும் என்ற காரணத்தினால் ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசாங்கமும் ஒரு குற்றவாளிக்கு துணை போய், வாதாடி கொண்டிருக்கிறது. அவர் மட்டும் இன்றி அவரது கூட்டணி கட்சியினரும் துதி பாடி கொண்டிருக்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீண்டி பார்க்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தை குறிப்பிடுகிறாரா? தைரியம் இருந்தால் ஆண்மை இருந்தால் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை கேள்வி கேட்கட்டும். கொங்கு மண்டலத்தை செந்தில்பாலாஜியின் அப்பன், முப்பாட்டன் செந்தில் பாலாஜிக்கு எழுதி வைத்துவிட்டு போய்விட்டார்களா? அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தல் உட்பட 2 தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் கொங்கு மண்டல தளபதியா? என சி.வி.சண்முகம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்