Vaiko allegation central government working on poor students do not get study medicine
மதுரை
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் மருத்துவ கல்வி படிக்க கூடாது என்பதில் மத்திய அரசு முழுவீச்சுடன் செயல்படுகிறது என்று வைகோ குற்றம்சாட்டினார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர், "தூத்துக்குடி மக்களுக்கு புற்றுநோய், தொற்றுநோய்களை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்காக 23 ஆண்டுகளாக போராடுகிறேன்.
தமிழக அரசு, மக்களை குறிப்பாக தூத்துக்குடி மக்களை ஏமாற்றும் விதமாக கண் துடைப்பு நாடகமாக அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணை நீதிமன்றத்தில் தோற்று போய்விடும். உச்ச, உயர் நீதிமன்றத்தின்மூலம் ஆலையை திறக்க இரகசிய உடன்பாடு உள்ளது என்று குற்றம் சாட்டுகிறேன்.
அமைச்சரவையை கூட்டி அதில் முடிவு எடுத்து, எதிர்கட்சி தலைவரை ஆலோசித்து அதை சட்டசபையில் ஒரு மசோதாவாக கொண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தால் வலுவாக இருக்கும். ஆனால், ஆலையை மூட நான்கு வரியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக மனித உரிமை ஆணையம் மட்டுமின்றி மூன்று முன்னாள் நீதிபதிகள், டி.ஜி.பி.க்கள் உள்ளிட்ட உண்மை அறியும் குழுவினர் விசாரித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இறுதி அறிக்கையை கணக்கில்கொண்டு, இந்த அரசு ஒரு மசோதாவை கொண்டு வர வேண்டும். மேலும் தூத்துக்குடி சம்பவத்தற்கு தனி நபர் ஆணையம் என்பது கண்துடைப்பு சம்பவம்.
மருத்துவ கல்வியில் இதுவரை முதலிடத்தில் இருந்த தமிழகம், நீட் தேர்வு பாதிப்பால் தற்போது 34–வது இடத்தில் உள்ளது. நீட் தேர்வு பாதிப்பு, அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ ஆகிய 3 மாணவிகளின் உயிரை பறித்துள்ளது. இதற்கு மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் கல்வி பயின்றவர்கள் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர். நீட் தேர்வால் சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் மருத்துவ கல்வி படிக்க கூடாது என்பதில் மத்திய அரசு முழுவீச்சுடன் செயல்படுகிறது"என்று அவர் கூறினார்
